×

ரேபிட் டெஸ்ட் கருவிகள், வெண்டிலேட்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக தொற்று பதிவாகவில்லை என்று தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கு, நீடிக்கப்படுமா இல்லை தளர்வு செய்யப்படுமா என்று மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

ஊரடங்கு குறித்து மே 3 க்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை கொரோனா வைரசால் 29,435 பேர் பாதிக்கப்பட்டு, 934 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே இதுவரை 6,869 பேர் குணமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பயோடெக்னாலஜி துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; தொற்று இரட்டிப்பு விகிதமும்  கடந்த 3 தினங்களாக 10.9 நாட்கள் என்ற குறைவான எண்ணிக்கையில் இருக்கிறது என்றார்.

47 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதுடன், 39 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய தொற்று எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் எந்த தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தற்காப்பு உடைகள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பதற்காக 100 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ரேபிட் டெஸ்ட் கருவிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

Tags : Harshvardhan ,India ,Minister of Health , Rapid Test Equipment, Ventilators, India, Union Minister of Health, Harshvardhan
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!