×

விழுப்புரத்தில் அனுமதி கிடைக்காததால் அரியலூருக்கு செல்ல முடியாமல் மணக்கோலத்தில் தவித்த தம்பதி

விழுப்புரம்: திருமணம் முடிந்து, அரியலூருக்கு செல்ல முடியாமல் மணக்கோலத்தில் புது தம்பதி விழுப்புரத்தில் தவித்தனர். கொேரானா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அனுமதி கிடைத்த பிறகு செல்ல முடியும். ஆனால், இறப்பு போன்ற அவசர சம்பவத்திற்கு செல்ல இந்த அனுமதி கடிதம் கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்திக்கும் (32), அரியலூர் மாவட்டம் புது மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த காவியா(27) என்பவருக்கும், நேற்று காலை, கண்டாச்சிபுரம் சிவன் கோயிலில் எளிமையாக திருமணம் நடந்தது.

இருதரப்பு வீட்டிலும் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் பெண் வீட்டிற்கு செல்வதற்காக மணக்கோலத்தில் தம்பதி தயாராகினர். ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கடிதம் கிடைக்காததால் நேற்று மணக்கோலத்திலேயே கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். இதுகுறித்து பெண்வீட்டார் கூறுகையில், திருமணத்திற்கு வரும்போது அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தோடு காரில் வந்துவிட்டோம். திருமணம் முடிந்து, சம்பிரதாய சடங்கிற்கு பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதற்காக, இந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கடிதம் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தோம். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை என்றனர். காலையில் திருமணம் முடிந்த கையோடு வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பிற்பகல் வரை தவித்துக்கொண்டிருந்தனர்.

Tags : Ariyalur Couple ,Ariyalur , Couple, Arikalur, unable, Ariyalur
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...