×

18 மாத அகவிலைப்படி நிறுத்தம், சரண் விடுப்பு ரத்து தமிழக அரசின் சர்வாதிகார போக்கு: ஜாக்டோ ஜியோ கடும் கண்டனம்

சென்னை: சரண் விடுப்பு, 18 மாத அகவிலைப்படி நிறுத்தம் செய்வது தமிழக அரசின் சர்வாதிகார போக்கு என்று ஜாக்டோ ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் தங்களது இன்னுயிரினையும்பொருட்படுத்தாது தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா நோய் தாக்குதலுக்கு எதிரான போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசிற்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில், ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை, ஏறத்தாழ ரூ.150 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், போராடி பெற்ற உரிமையான சரண் விடுப்பினை ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா நோய் தொற்று பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் உரிமையை பறிப்பது என்பது அரசின் சர்வாதிகார போக்காகும். தமிழக அரசின் இந்த போக்கானது, 2003ம் ஆண்டில் தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் உரிமைகளை பறித்ததை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. மத்திய அரசு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரை அகவிலைப்படியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவினை அப்படியே அடியொற்றி, தமிழக அரசும் ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரை அகவிலைப்படியினை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டும் போதாதென்று, ஆசிரியர்-அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியினை 7.9 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாக குறைத்து ஆணையிட்டுள்ளது. தமிழக அரசின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ வன்மையாகக் கண்டிக்கிறது. சரண் விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : cancellation ,state ,DA ,leave , Aggravated Parking, Saran Leave Cancellation, Jakdo Geo
× RELATED உயர் வகுப்பினர் இடஒதுக்கீட்டுக்கான...