×

தூய்மை பணியாளருக்கு ஒதுக்கிய பாதுகாப்பு உபகரணம் எங்கே?: பி.சீனிவாசலு, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச்செயலாளர்

தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை முறையான பாதுகாப்பு வசதியை செய்து தரவில்லை. இதன் காரணமாக நான்கு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம்.  இதில், 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். அவர்கள் கடந்த 10 வருடங்களாக தூய்மை பணியில் உள்ளனர்.  எனவே தான், நாங்கள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹2 லட்சம் நிவாரண நிதியுதவி தர வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் பொதுமக்களுக்கு எந்தவித தொற்றும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் தூய்மைப்பணியில் ஈடுபடுகிறோம். அப்படிப்பட்ட எங்கள் பணியாளர்கள் மீது ஒரு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தூய்மை பணியாளர்கள் இந்த நேரத்திலும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அவர்களால் மற்றவர்களுக்கு பரவும் என்கிற அச்சம் காரணமாக இருந்தாலும், அவர்கள் சேவை மனப்பான்மையுடன் மக்களின் நலனுக்காக இந்த பணியில் இரவு, பகலாக ஈடுபடுகின்றனர்.
நாங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறி வருகிறோம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

சென்னையில் 6,401 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் நிரந்தர தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர். சென்னையில் ஒப்பந்த பணியாளர்கள் 15 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர். சென்னை மாநகராட்சி நிர்வாகம் வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரவில்லை. இதனால், அவர்கள் பணி முடிந்து வந்தால் கூட வெறும் தண்ணீரில் தான் கையை கழுவுகின்றனர். இதனால், தான் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. தற்போது அவர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாங்கள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம். தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம். தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ஊழியர்களிடம் கேட்டால் தரவில்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே சென்றது என்பது தெரியவில்லை. இந்த காலகட்டத்தில் வேலை ெசய்யும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். அந்த பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களும் மனமுவந்து மக்கள் பணியாற்றுவார்கள்.

தூய்மை பணியாளர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரவில்லை. இதனால், அவர்கள் பணி முடிந்து வந்தால் கூட வெறும் தண்ணீரில் தான் கையை கழுவுகின்றனர். இதனால், தான் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.


Tags : P. Srinivasalu ,purity worker ,General Secretary ,Chennai Corporation ,Red Cross Association ,purity employee , safety apparatus, purity employee, P. Srinivasalu, General Secretary
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...