×

பிரதமர் மோடி புகழாரம் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் போர் வீரர்களாக உள்ளனர்

புதுடெல்லி: ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களாக செயல்படுகிறார்கள். இந்த மக்களின் போரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாதாந்திர ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது:இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. மக்களோடு இணைந்து நிர்வாகமும் போரை எதிர்கொண்டு வருகிறது.  மக்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களாகத் தலைமையேற்று போராடி வருகிறார்கள். நாடு முழுவதிலும், ஒவ்வொரு தெரு, குடியிருப்புப் பகுதியிலும், அனைத்து இடங்களிலும், இன்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக, உதவியாக இருக்கிறார்கள்.   

நமது விவசாயிகள் பெருந்தொற்றுக்கு இடையே தங்கள் வயல்களில் இரவு பகலாக உழைத்து, தேசத்தில் யாரும் பட்டினியோடு உறங்கி விடக்கூடாது என்று வியர்வை சிந்தி வருகிறார்கள்.  உதவ வேண்டும் என்ற உணர்வு தான் கொரோனாவுக்கு எதிராக தொடுத்திருக்கும் பெரும் போருக்கு பலம் அளித்து வருகிறது. 130 கோடி நாட்டுமக்களின் இந்த உணர்வுக்குத் தலைவணங்குகிறேன். covidwarriors.gov.in.  என்ற தளத்தின் மூலம் கொரோனா தொடர்பான அனைத்து விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். கொரோனா தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இதில் தீர்வு பெற முடியும்.
நாடு முழுவதிலும் சுகாதார சேவைகளை ஆற்றி வருபவர்கள் தொடர்பாக அறிவித்திருக்கும் அவசரச்சட்டம் அவர்களுக்கு மிகவும் மன நிறைவை அளித்திருக்கிறது. இந்த நாட்டைக் கொரோனாவிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இரவு பகலாக போராடி வருகிறார்கள்.  அவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானதாக ஆகியிருக்கிறது.

நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாம் அதீத நம்பிக்கையில் சிக்கிக் கொள்ள வேண்டாம், நமது நகரத்தில், கிராமத்தில், தெருவில், அலுவலகத்தில், இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை, இனியும் அது நம்மை அண்டாது என்றெல்லாம் தயவுசெய்து எண்ணங்களை உங்கள் மனதிலே வளர்த்துக் கொள்ள வேண்டாம்.   உலகம் சந்தித்திருக்கும் அனுபவங்கள் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகளை அளிக்கின்றன. கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும், அழிவுப்பாதை நிச்சயம்.  இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம்.  உங்கள் அனைவருக்கும் சிறப்பான உடல்நலம் வாய்க்கட்டும்.  அடுத்த மனதின் குரலில் நாம் சந்திக்கும் வேளையில், இந்த உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைந்தோம் என்ற செய்தி உலகெங்கிலுமிருந்து கிடைக்கப்பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : warriors ,Modi ,Corona ,war , Prime Minister Modi ,fame People, warriors,war against Corona
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...