×

அரிய வகை ரத்தம் கிடைக்காமல் பிரசவத்தின்போது தவித்த பெண்: ஆபத்தில் கை கொடுத்த ‘உயிர்த்துளி’

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஈய்யனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி (25). இவரது ரத்தம் பாம்பே ரத்தம் (எச்எச் பிரிவு) என்ற அரியவகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தது. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயலட்சுமிக்கு ரத்தம் குறைவாக உள்ளதால், பாம்பே ரத்த வகையை ஏற்பாடு செய்யும்படி, அவரது தாய் அலமேலுவிடம் கூறியுள்ளனர். இதையறிந்து செய்வதறியாது தவித்த அலமேலு, மருத்துவமனை வளாகத்திலிருந்த பொதுமக்களிடம் தன் மகளை காப்பாற்ற வேண்டி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்ட அங்கிருந்த புதுச்சேரி ஆயுதப்படை காவலர் செல்வம், உயிர்த்துளி ரத்ததான அமைப்பினை தொடர்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த அமைப்பின் தன்னார்வலர் சந்தோஷ் (25) உயிர்த்துளி வாகனத்தில் ஜிப்மர் ரத்த வங்கிக்கு வந்து, பாம்பே வகை ரத்தத்தை தானமாக வழங்கினார். தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த விஜயலட்சுமியின் தாய் அலமேலு, ரத்ததானம் வழங்கிய சந்தோஷுக்கும், உதவிய ஆயுதப்படை காவலர் செல்வத்துக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். ஆபத்தான நேரத்தில் பெண்ணுக்கு அரிய வகை ரத்தம் கிடைக்க உதவிய காவலர், மற்றும் ரத்தம் வழங்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

‘அது என்ன பாம்பே ரத்தம்’
மனித ரத்த வகையில் மிக அரிதான ரத்த வகையும் இருக்கிறது. அவற்றில் பாம்பே ரத்த வகை முக்கியமானது. இதனை முதன்முதலாக 1952ம் ஆண்டு மும்பையில் டாக்டர் பெண்டே கண்டுபிடித்ததால் இந்தப் பெயர் வந்தது. ஏ,பி, ஓ ரத்த வகைகளில் ஆன்டிஜன்கள், ஆன்டிபாடிகள் கலவைகளை வைத்தே பாசிட்டிவ், நெகடிவ் என ரத்தங்கள் வகைப்படுத்தப்படுகிறது. இதனை மாற்றி கொடுக்கும் போது, உயிருக்கு உலை வைத்துவிடுகிறது. ஆன்டிஜன் உற்பத்தி செய்ய சிவப்பணுக்களில் ‘ஹெச் ஆன்டிஜன்’ இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் உற்பத்தியாகாது.

ஆன்டிஜன்களை இழந்த விசித்திரமான ரத்த வகை (பாம்பே) இதுதான். இந்தியாவில் அப்போது 35க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பாம்பே குரூப் என்ற பெயரையும் பெற்றது. 10 லட்சத்தில் 4 பேருக்கு இந்த ரத்த வகை இருக்கிறது. எந்த ரத்த வகையாக இருந்தாலும் 35 நாட்களுக்குதான் சேகரித்து வைக்க முடியும் என்பதால், இதனை முன்கூட்டியே சேகரித்தும் வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : childbirth ,blood Woman , Rare type of blood, woman, life
× RELATED கர்நாடக மாநிலம் சிவமொக்கா...