×

இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த மறுநாளே அம்மா உணவகங்களில் உணவு தட்டுப்பாடு: அளவும் குறைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 400 அம்மா உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்கள் என 407 அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் நிதி பெறப்பட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் காலை டிபன், மதியம் கலவை சாதம் மற்றும் இரவு சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சென்னையில் அம்மா உணவகங்களை கையகப்படுத்திய அதிமுகவினர், இலவசமாக உணவு வழங்குவதாக பேனர் வைத்தனர்.
ராயபுரம் பகுதியில் அமைச்சர் அம்மா உணவக அரசியலை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சில அதிமுகவினர் பொதுமக்களுக்கு இலவசமாக  உணவு வழங்குவதாக கூறி  மொத்தமாக டோக்கன்களை அள்ளி சென்றனர்.இதனால் மண்டல அலுவலர்களுக்கும், ஆளும்கட்சிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.  இதனையடுத்து கொரோனா வைரஸ்  தாக்கம் முடியும் வரை அம்மா உணவகங்களில் அனைவருக்கும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார்.

அம்மா உணவகங்களில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பலரும் சாப்பிட்டு வருகின்றனர். இந்த அம்மா உணவகங்களில் தினமும்  எவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்கூட்டியே ஓரளவிற்கு கணித்து அந்த அளவிற்கு தேவையான பொருட்களை அந்தந்த அம்மா உணவகங்களில் ஊழியர்கள் தயார் செய்து, அவர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம்.தற்போது அனைத்து உணவு வகைகளும் இலவசம் என்பதால் உணவு உண்ண வருபவர்கள் பெயர்களை மட்டும் கேட்டு எழுதிக் கொண்டு உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் உணவின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தவகையில் திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மதியம் 12.30 மணிக்கே உணவு முடிந்து விட்டதாக கூறி அம்மா உணவகத்தை மூடி விடுகின்றனர். மேலும் கொளத்தூர் பகுதியில் தினமும் 700 இட்லிகள் வழங்கப்படும் அம்மா உணவகத்தில் காலையில் தற்போது 300 இட்லிகள் மட்டுமே  வழங்கப்படுகிறது.இதுகுறித்து அம்மா உணவகத்தில் உணவருந்தும் முதியவர் ஒருவர் கூறுகையில், ‘‘தினந்தோறும் காலை 9 மணிக்கு சென்று பெரம்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிடுவேன். ஆனால் நேற்று சாப்பிட  சென்ற போது இட்லி காலியாகிவிட்டது என கூறுகிறார்கள். மேலும் மதியம் 12 மணிக்கு வந்தால் தான் சாப்பாடு கிடைக்கும். தாமதமாக வந்தால் கிடைக்காது என கூறுகிறார்கள்.

குறைந்தபட்சம் ₹5 கொடுத்து சாப்பிட்டபோது  இருந்த திருப்தி தற்போது இல்லை. இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு 100 சதவீதம் கடைபிடிக்கப்படுகிறது. சாலையோரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் அம்மா உணவகத்தையே  நம்பி இருக்கின்றனர்.  எனவே அம்மா உணவகத்தில் முறைப்படி உணவு வழங்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

அதிகாரிகள் உத்தரவு
அம்மா உணவக ஊழியர் ஒருவர்  கூறுகையில், ‘‘இலவசம் என்பதால் தற்போது எங்களது உயரதிகாரிகள் குறைவாகவே  உணவை  விநியோகிக்க எங்களுக்கு உத்தரவு பிறபித்துள்ளனர். அதிகமாக  உபயோகித்தால் எங்களை அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். அதனால் எங்களது  வேலைக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே தற்போது  வழங்கப்பட்ட அளவை பாதியாக குறைத்து விட்டோம்,’’ என்றார்.

நோயாளிகள் பாதிப்பு
அம்மா உணவகங்களில் தினசரி இரவில் வழங்கப்பட்ட சப்பாத்தி முற்றிலுமாக  நிறுத்திவிட்டு அதற்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. இதனால்  சர்க்கரை நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  பெரும்பாலானவர்கள் இரவில் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால்  தற்போது சில அம்மா உணவகங்களில் சப்பாத்திக்கு பதில் கலவை சாதம்  தரப்படுவதால் நேயாளிகள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : mother restaurants ,Food shortage ,Public ,Mother's Restaurant , Food shortage , mother restaurants , after was announced for free
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...