×

தாராவியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மணமகள் வசிக்கும் கட்டிடத்தில் மணமகன் நுழைய அனுமதி மறுப்பு: திருமணம் ஒத்திவைப்பு

மும்பை: தாராவியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக வாலிபர் ஒருவரது திருமணம் தடைபட்டு போன சம்பவம் நடந்துள்ளது.
மும்பையில் தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது மிக நெருக்கமான பகுதி என்பதால், வைரஸ் பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், ஒருவரின் திருமணமே இங்கு தடைபட்டு நின்றுள்ளது. மும்பை தாராவியைச் சேர்ந்த வாலிபர் அல்தாப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குவைத்தில் வேலை செய்து வந்த அவர் கடந்த மார்ச் மூன்றாவது வாரத்தில் மும்பைக்கு திரும்பினார். குவைத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிய அல்தாப் 14 நாட்கள் வரை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன்பிறகு அல்தாப்புக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்தது. முன்னதாக, அல்தாப் குவைத்தில் இருந்து மும்பைக்கு திரும்புவதற்கு முன்பாகவே அவரது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வைத்திருந்தனர். மணமகள் வீட்டார் சாந்தாகுரூஸ் அருகில் உள்ள கலீனாவில் வசிக்கின்றனர்.அல்தாப் மும்பைக்கு வந்ததும் இரு வீட்டாரும் பேசி ஏப்ரல் 25ம் தேதி திருமணத்தை நடத்துவது என முடிவு செய்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் கலீனாவில் உள்ள மணமகள் வீட்டில் எளிமையான முறையில் திருமணச் சடங்குகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி மணமகள் வீட்டார் தாங்கள் வசிக்கும் ஹவுசிங் சொசைட்டி கட்டிட நிர்வாகிகளிடம் கூறி, தங்கள் வீட்டில் திருமண நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரினர்.

ஆனால், மணமகன் தாராவியைச் சேர்ந்தவர் என்பதால், மணமகனையும் அவரது குடும்பத்தாரையும் கட்டிட வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று ஹவுசிங் சொசைட்டி நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். தாராவியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால், மணமகனும் அவரது குடும்பத்தாரும் கட்டிட வளாகத்திற்குள் வந்தால் அவர்கள் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ஹவுசிங் சொசைட்டி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால், நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தடைபட்டு போனது.  இதுகுறித்து மணமகளின் நெருங்கிய உறவினரான சலாம் காஜி கூறுகையில், ‘‘மணமகன் அல்தாப் மற்றும் அவரது குடும்பத்தினர் தாராவியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பான பகுதியில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை. ஆனால், ஹவுசிங் சொசைட்டி நிர்வாகிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறோம். நினைத்தபடி ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும்’’ என்றார்.

Tags : bride ,Tarawi ,Adjournment ,residence , Denial ,bride , bride's residence,reason ,belongs to Tarawi: Adjournment
× RELATED மணப்பெண் மாயம்