×

தமிழகத்திலிருந்து வனப்பகுதி வழியாக வருபவர்களை தடுக்க குமுளி எல்லைப் பகுதியில் ‘பார்டர் செக்கிங் பாய்ண்ட்’

*கேரள போலீசார் நடவடிக்கை


கூடலூர் : கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் வரும் பொதுமக்களை தடுக்க, எல்லைப்பகுதியில் ‘பார்டர் செக்கிங் பாய்ண்ட்’ அமைத்து கேரள போலீசார் கண்காணித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

முன்று தினங்களுக்கு முன் இடுக்கி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பச்சை மண்டலத்தில் இருந்த இடுக்கி மாவட்டம் தற்போது, ஆரஞ்சு மண்டலத்தில் சேர்க்கப்பட்டது. இதனால், தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் கேரள போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். இருப்பினும் தமிழகத்திலிருந்து சிலர் வனப்பாதை வழியாக கேரளா செல்வதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க கேரள - தமிழக எல்லையில் வனப்பகுதி வழியாக கேரளாவுக்குள் நுழைவதை தடுக்க கேரள போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக எல்லை வனப்பகுதியான குமுளியில், ரோசப்பூகண்டம் பகுதியில் ‘பார்டர் செக்கிங் பாய்ண்ட்’ அமைத்துள்ளனர். குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் இதை தொடங்கி வைத்தார். எஸ்ஐ சையது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேரள போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழக - கேரள எல்லைப்பகுதியில் 24 மணிநேரமும் கேரள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதி வழியாக கேரளாவுக்குள் நுழைந்தவர்கள் தமிழகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ‘பார்டர் செக்கிங் பாய்ன்ட்” அமைக்கப்பட்ட பின் வனப்பகுதி வழியாக வந்த 4 பேர் குமுளியில் உள்ள ஹாலிடே ஹோமில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 28 நாட்கள் வரை அவர்கள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்’’ என்றனர்.


Tags : border ,forest ,Kumuli ,Kerala Police ,Kumuli Forest Area ,Spreading Corona , Kerala police, Kerala, Police,Corona lockdown,Spreading
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...