×

போதை பொருட்கள், கள்ளச்சந்தை மது விற்பனையில் நெ.1: காய்கறி வியாபாரி பாஸ் மூலம் வேனில் தேனி டூ திருச்சி, புதுகைக்கு கஞ்சா கடத்தல்

திருச்சி: போதை பொருட்கள், கள்ளச்சந்தையில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் திருச்சியில், காய்கறி வியாபாரி பாஸ் மூலம் வேனில் தேனியில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தி வருவது தெரியவந்துள்ளது. நேற்று ஆம்புல்ன்சில் மது கடத்தல் நடப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கஞ்சா கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திருச்சியில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மருந்து, மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், பேக்கரி உள்ளிட்டவைகள் வாங்க விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களிலும் இருந்து கொண்டு வரும் பால், காய்கறி வாகனங்களை நிறுத்த கூடாது என அந்தந்த மாவட்ட காவல்துறை மற்றும் சோதனை சாவடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி தேனியிலிருந்து காய்கறி லோன் வேன்களில் திருச்சிக்கு கஞ்சா கடத்தி வந்து சப்ளை செய்து வரும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ராம்ஜிநகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவந்ததால் சாராய வியாபாரிகள் சாராய விற்பனை நிறுத்தியுள்ளனர். சாராயத்தில் கடும் கெடுபிடிகளால் வியாபாரிகள் கஞ்சா விற்பனையில் இறக்கியுள்ளனர். அவை சிறிய  பொட்டலங்களாக விற்கப்படுவதால் விற்பது  அவர்களுக்கு சுலபமாக உள்ளது. கஞ்சாவை  வாங்க ராம்ஜிநகர் கஞ்சா வியாபாரிகள் காய்கறி வியாபாரிகளுக்கு வழங்கப்படும் பாஸ் வாங்கிக்கொண்டு காய்கறி வியாபாரிகள் போல்காட்டிக்கொண்டு லோடு வேன்களில் தேனிக்கு சென்று காய்கறிகளுடன் கஞ்சாவையும் வாங்கி வந்து இங்குள்ள சில்லறை வியாபாரிகள் மற்றும் கஞ்சா பிரியர்களுக்கு நேரடியாக விற்று வருவது அதிகரித்துள்ளது.

பிளாக்கில் மதுவிற்ற வியாபாரிகளுக்கு மது கிடைக்காததால் தற்போது கஞ்சாவை வாங்கி விற்று வருகின்றனர். இதனால் திருச்சியில் கஞ்சா விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மதுகிடைக்காத விரக்தியில் மதுபிரியர்களும் தற்போது கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி போதைக்கு சமாளித்து வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியிலும் கஞ்சா பதுக்கி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. காய்கறி பாஸ் வாங்கி அங்கும் கஞ்சா கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

கஞ்சா எஸ்.ஐக்கு தொடர்பா?
கடந்தாண்டு மாநகரில் கஞ்சா தடுப்பு பிரிவில் பெண் எஸ்ஐயாக இருந்த புவனேஸ்வரி, ஆந்திரா கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு கஞ்சா கடத்த உதவியுடன், அவருடன் நெருங்கி பழகி வந்தார். பாலக்கரை பீமநகரில் உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பில்  ஒரு வீட்டில் வசித்து வந்த பெண் எஸ்ஐ, அந்த வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு தஞ்சம் அளித்ததால்  மேல் நடவடிக்கையாக அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்  அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.  இந்நிலையில் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் பெண் எஸ்ஐக்கு வீடு ஒதுக்கியது எப்படி என்பது தெரியாமல் அந்த விசாரணை முடங்கியுள்ளது.

இன்றுவரை எஸ்ஐ வீட்டை காலி செய்யாமல் அங்கேயே வசித்து வருகிறார்.  ஒரு சில உயர் அதிகாரிகளின் கவனிப்பால் இன்றும் அவர் அதே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராயத்தை தொடர்ந்து கஞ்சா கடத்தல், விற்பனை அதிகரித்து வருவதால் போலீசாருக்கு தலைவழி அதிகரித்துள்ளது. கஞ்சா எப்படி கிடைக்கிறது, எப்படி கடத்தி வருகின்றனர், பழைய கஞ்சா விற்பனையாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா  என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Passes Van ,Theni ,Vegetable Dealer ,Trichy , Drugs, counterfeit, alcohol sales, cannabis
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு