×

கொரோனா பாதிப்பு எதிரொலி; குடியிருப்புகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை: வெறிச்சோடிய தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக, தர்மபுரி புறநகர் குடியிருப்புகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதித்து, கம்புகளால் பொதுமக்கள் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 1700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தர்மபுரி இருந்தது. இந்நிலையில் மொரப்பூர் அருகே எலவடையை சேர்ந்த லாரி டிரைவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நேற்று வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைந்தது. காய்கறி கடைகள், மளிகை கடைகளிலும் மக்கள் பொருட்கள் வாங்க குறைந்த எண்ணிக்கையில் தான் காணப்பட்டனர். சாலைகளில் வாகன நடமாட்டம் பாதியாக குறைந்தது.

இந்நிலையில், நேற்று தர்மபுரி அடுத்துள்ள இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் வசிக்கும் இளைஞர்கள் குடியிருப்பு பகுதிக்குள், வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என அட்டையில் எழுதி கம்புகளால் தடை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், செந்நில் நகர் உள்ளே செல்லும் நபர்கள் யார் எங்கே செல்கின்றனர் என இளைஞர்கள் விசாரித்து அதன்பின்னரே அவர்களை உள்ளே அனுப்பி வைக்கின்றனர். இதே போல் தர்மபுரி அம்பேத்கர் காலனி, பாரதிபுரம், ஒட்டப்பட்டி போன்ற பல குடியிருப்பு பகுதிகளிலும், அந்தந்த பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு புதுநபர்கள் வராமல் தடை ஏற்படுத்தியுள்ளனர்.


Tags : Corona ,Dharmapuri ,outsiders ,dwellings ,Barrier ,Duelings , Corona vulnerability, residence, barrier to entry
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி