×

ஊரடங்கு காரணமாக கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயம் கடுமையாக பாதிப்பு

* விலை உயரும் அபாயம்
* விவசாயிகள் வேதனை

கொடைக்கானல்:  கொடைக்கானலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மலைப்பூண்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் மலைப்பூண்டு விலை உயரும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கான‌லின் அடையாள‌மாக‌ விள‌ங்க‌க்கூடிய‌து புவிசார் குறியீடு பெற்ற‌ ம‌லைப்பூண்டு. கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வரகிறது. ஒருபோக‌ விளைச்ச‌ல் முடிந்த‌ நிலையில், இர‌ண்டாம் போக‌த்திற்கு வ‌ர‌ வேண்டிய‌ விதைக‌ள் கிடைக்கவில்லை.  விளைவித்த‌ பூண்டுக‌ளையும் முழுமையாக‌ ச‌ந்தைப்ப‌டுத்த‌ முடியாம‌ல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். கொடைக்கான‌ல் ம‌லைப்பூண்டிற்கு க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்புதான் புவிசார் குறியீடு கிடைத்த‌து. இத‌னால் பூண்டிற்கு நல்ல விலை கிடைத்து வந்தது. பொதுவாக, கொடைக்கான‌லில் 2 ர‌க‌ பூண்டுக்க‌ள் விளைவிக்க‌ப்ப‌டும்.

ஒன்று சிங்க‌ப்பூர் ர‌க‌ம், மற்றொன்று மேட்டுப்பாளைய‌ம் ர‌க‌ம் ஆகும். விவ‌சாயிக‌ளால் ப‌யிரிட‌ப்பட்ட  சிங்க‌ப்பூர் ர‌க‌ பூண்டு அறுவடை முடிவ‌டைந்த‌ நிலையில், வ‌ழ‌க்க‌மாக‌ ரூ.500 வ‌ரை விற்கப்ப‌டும் ம‌லைப்பூண்டு ரூ.300 வ‌ரை ம‌ட்டுமே விற்பனையாகிற‌து. தற்போதைய சூழலில் இர‌ண்டாம் போக‌த்திற்காக‌ இந்த‌ மாத‌த்தில் நடவு செய்யப்படும். இதற்காக மேட்டுப்பாளைய‌த்தில் இருந்து பெற‌க்கூடிய‌ விதைக‌ளை வைத்துத்தான், அடுத்து 3 மாத‌ங்க‌ள் பூண்டு விவ‌சாய‌ம் ந‌டைபெறும். த‌ற்போது விதைக‌ள் விற்கப்பட்டாலும் அதிக‌ விலைக்கு விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுவ‌தால் அத‌னை வாங்க‌ முடியாம‌ல் சிறு, குறு விவ‌சாயிக‌ள் திண‌றி வ‌ருகின்ற‌னர். இத‌னால் பூண்டு விவ‌சாய‌த்தை ந‌ம்பி இருக்க‌க்கூடிய‌ சுமார் 50க்கும் மேற்ப்ப‌ட்ட‌ ம‌லைக்கிராமத்தைச் சேர்ந்த விவ‌சாயிக‌ள் வேதனை அடைந்துள்ள‌ன‌ர். இதனால் மலைப்பூண்டு விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மன்னவனூர் பகுதி விவசாயி விவேக் கூறியதாவது, ‘‘தற்போது முதல் போகம் அறுவடை செய்யப்பட்டு விட்டது. இரண்டாம் ேபாகத்திற்கான மேட்டுப்பாளையம் மலைப்பூண்டு விதை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லை. அங்கு விற்கப்படும் விதைப்பூண்டின் விலையும் அதிகளவில் உள்ளது. எனவே இரண்டாம் போக வெள்ளைப்பூண்டு விதைப்பு கேள்விக்குறியாகி விட்டது. தற்போது விளைவிக்கப்பட்டு உள்ள வெள்ளைப்பூண்டின் சந்தைப்படுத்தலின் நிலையும் மோசமாகி உள்ளது. எனவே விலை குறைந்து போய் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விதைப்பூண்டு கிடைப்பதற்கான உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Kodaikanal , Curfew, Kodaikanal, Mountain Farm Farming
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்