×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 72 வயது மூதாட்டி மதுரையில் பலி: சமூக பரவல் முறையில் உயிரிழந்தார்

மதுரை:  மதுரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 72 வயதான மூதாட்டி, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பலியானார்.
மதுரை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று உறுதியாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த ஒருவர், மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டராக பணியாற்றி வருகிறார். அவரது 72 வயதான தாயார், ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.பின்னர் தொடர் காய்ச்சல், சளித்தொல்லை காரணமாக, மேல் சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் நேற்று அதிகாலை மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து, மூதாட்டியின் குடும்பத்தினர், அவரது வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர் வசித்து வந்த, மேலமாசி வீதியில் உள்ள ஒரு தெரு, முழுவதுமாக அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பலியான மூதாட்டி கடந்த 4 மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையிலேயே கொரோனா பாதித்துள்ளது. விசாரணையில், மீனாட்சி கோயிலில் பட்டரான இவரது மகன் வெளிநாடு சென்று வந்தது தெரிந்தது.

இவர் மூலமாகவோ, வீட்டு பணியாளர் பெண் மூலமாகவோ மூதாட்டிக்கு கொரோனா வந்திருக்கலாம். எனவேதான் 6 வேளை பூஜைகளிலும் ஈடுபட்டிருந்த கோயில் பட்டர், இவருடன் இருந்த பிற பணியாளர்கள், கோயில் பாதுகாப்பில் இருந்த போலீசார் உள்ளிட்டோரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்குப் பிறகே, மூதாட்டிக்கு யார் மூலம் பாதிப்பு வந்திருக்கும் என்பது குறித்து தெரிய வரும்.மதுரையில், அண்ணா நகரை சேர்ந்த 54 வயதான பில்டிங் கான்ட்ராக்டர், கடந்த மார்ச் 25ம் தேதி கொரோனாவுக்கு பலியானார். தற்போது மதுரையில் 2வதாக மூதாட்டி கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.


Tags : granddaughter ,Madurai Corona , Corona, aged 72, Madurai, died
× RELATED மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில்...