×

மருத்துவ பணியாளர்களை அழைத்து வரும் அரசு பஸ் டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றும் அவலம்

வேலூர்: கொரோனா ஊரடங்கால் மருத்துவ பணியாளர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என்றும், அதனால் ஒருவித அச்சத்துடன் பணியாற்றி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலால் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக அனைத்து வகை போக்குவரத்துக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து அரசு மருத்துவமனைகளில் வந்து பணியாற்றும் ஊழியர்கள் சிக்கலை சந்தித்தனர். முக்கியமாக கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள், பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்ள வேலூர் ஜிபிஎச் மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா தலைமையிட மருத்துவமனை, அரக்கோணம் அரசு மருத்துவமனை,

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆம்பூர் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் வெளியூர்களில் இருந்து வந்து பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ பணியாளர்கள் ஆகிேயாருக்காக அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்களை குறிப்பிட்ட நேரங்களில் இயக்கி வருகிறது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சத்துவாச்சாரி, காட்பாடி, கண்ணமங்கலம், ஆற்காடு ஆகிய இடங்களில் இருந்தும், வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சோளிங்கர், காவேரிப்பாக்கம், ஆற்காடு, நெமிலி ஆகிய இடங்களில் இருந்தும், அரக்கோணத்துக்கு காவேரிப்பாக்கம், சோளிங்கர், நெமிலி ஆகிய இடங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்பஸ்களை இயக்க டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் பணியாளர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதுடன்,

பணி முடிந்ததும் அவரவர் ஊர்களில் இறக்கி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தங்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் உட்பட எதையும் வழங்கவில்லை. முகக்கவசத்தை மட்டும் நாங்களே வெளியில் வாங்கி அணிந்து வருகிறோம். அதேநேரத்தில் காரைக்குடி உட்பட மாநிலத்தில் வேறு பகுதிகளில் எங்களை போன்று பணியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்களுக்கு கையுறை, முகக்கவசம், சானிடைசருடன், சிறப்பு பாதுகாப்பு உடையே வழங்கப்படுகிறது. அந்த உடையுடனே அவர்கள் பாதுகாப்புடன் பஸ்களை இயக்கி வருகின்றனர். எனவே, எங்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதால் சிறப்பு பாதுகாப்பு உடையும், கையுறையும், சானிடைசர், கைகழுவும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government bus drivers ,Government ,bus drivers , Medical Worker, Government Bus Drivers
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...