×

அரசின் விதிமுறைகள் காரணமாக பலர் திண்டாட்டம் கிராம கோயில் பூஜாரிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா?

நெல்லை: கொரோனா பாதிப்பால் ஊரடங்கு காரணமாக கிராம கோயில் பூஜாரிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அரசின் விதிமுறைகள் காரணமாக பலருக்கு கொரோனா நிவாரணம் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் கிராம கோயில் பூஜாரிகள் உள்ளனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் நலவாரியங்களில் பதிவு செய்து பணியாற்றி வருகின்றனர்.  கிராமங்களில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பூஜாரிகள், கோயில் வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பில் ஊரடங்கு காரணமாக அவர்கள் கோயிலுக்கு சென்றாலும் ஆகம விதிப்படி பூஜைகளை மட்டுமே நடத்த முடிகிறது. பக்தர்களுக்கு சிறப்பு பூஜை செய்யும் போது அவர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையில் தான் இவர்களது வாழ்க்கை நகர்ந்து வந்தது. தற்போது வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதி இல்லாததால் கிராம கோயில் பூஜாரிகளும் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.

அரசு அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் தற்போது கொரோனா நிவாரண தொகையை அளித்து வருகிறது. அதேபோல் நலவாரியத்தில் பதிவு செய்த கிராம கோயில் பூஜாரிகளுக்கும் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  கிராம கோயில் பூஜாரிகள் கொரோனா உதவி தொகை பெற்றிட இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள சில விதிமுறைகள் பூஜாரிகளுக்கு சிரமங்களை தருகிறது. அதன்படி நலவாரிய உறுப்பினர் பதிவை புதுப்பிக்காத பட்சத்தில், கிராம கோயில் பூஜாரிகளுக்கு அடுத்த சுற்றில் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட பூஜாரிகள் ஓய்வூதியம் பெற தகுதியுள்ளதால், அவர்களுக்கு கொரோனா நிவாரணம் கிடையாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நலவாரியத்தில் இடம் பெற்றுள்ள பூஜாரிகள் பலரும் கொரோனா நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் கூறுகையில், ‘‘தமிழகத்தை பொருத்தவரை அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையானது, எவ்வித வருமானமும் இன்றி தவிக்கும் ஏழை, எளிய பூஜாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதியாகும். இதனை பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். பூஜாரிகள் நலவாரியம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. பல மாவட்டங்களில் இணை ஆணையாளர் அலுவலகங்கள் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி நலவாரியத்தை புதுப்பிக்கவில்லை. இதை காரணம் காட்டி, அடுத்த சுற்றில் நிவாரணம் வழங்கப்படும் என்பது பூஜாரிகளை மேலும் கஷ்டப்படுத்தும். கிராமங்களில் பல பூஜாரிகள் முதியோர் அந்தஸ்தில் இருப்பதால், ரூ.1000 ஓய்வூதியத்தை காரணம் காட்டி அவர்களை கொரோனா நிவாரணத்தில் புறக்கணிப்பது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.

எனவே கொரோனா நிவாரணம் அனைத்து விதமான பூஜாரிகளுக்கு அரசால் வழங்கப்பட வேண்டும்.’’ என்றார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் மகாராஜ சிவாச்சாரியார் கூறுகையில், கோயில்கள் அனைத்தும் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி வருமானத்தை நம்பி பிழைப்பு நடத்தி வந்த கோயில் பூஜாரிகள் தற்போது பட்டினி கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசின் நிவாரணம் ரூ.ஆயிரம் அனைத்து கோயில் பூஜாரிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இதில் நலவாரிய பதிவு, புதுப்பித்தல் என பாகுபாடு பார்க்கக் கூடாது என்றார்.

விரட்டும் போலீசார்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில கிராம கோயில்கள் காட்டு பகுதியிலும் உள்ளன. அங்கேயே தங்கியிருந்து சில பூஜாரிகள் சாமிகளுக்கு ஒருவேளை பூஜைகளை நடத்தி வருகின்றனர். ஆனால் அங்கு செல்லும் போலீசார் கோயில்களில் தங்கவே கூடாது என பூஜாரிகளை விரட்டுகின்றனர்.

Tags : village temple priests ,village temple chiefs , The rule of the state, the village temple priest, relief
× RELATED சவரத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை