×

தமிழக அரசின் மளிகை தொகுப்பிற்காக மஞ்சள் பொடி தயாரிக்கும் பணிகள் தீவிரம்: ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு

ஈரோடு: தமிழக அரசின் மளிகை தொகுப்பில் மஞ்சள் பொடி இடம் பெற்றுள்ளதால் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் பொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஈரோடு கருங்கல்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு  மங்களம் என்ற பெயரில் மசாலா பொருட்களை தயாரித்து வருகின்றனர். மஞ்சள், மல்லி, மிளகாய், சாம்பார், ரசம், மட்டன், சிக்கன் உள்ளிட்ட மசாலா பொடிகளும், ராகி, கடலைமாவு உள்ளிட்ட உணவு பொருட்களும் தயாரித்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, டெல்லி, ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலஙகளுக்கு ஈரோடு மசாலா பொடிகள் விற்பனைக்காக செல்கிறது. வழக்கமாக, தினமும் 10 டன் மசாலா பொடி தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. 1.5 டன் அளவிலே மஞ்சள் பொடி மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் மஞ்சள் பொடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இங்கு தயார் செய்யப்பட்ட மஞ்சள் பொடி கரூர் மாவட்டத்திற்கு 100 கிராம் கொண்ட 25 ஆயிரம் பாக்கெட்டுகளும், நாமக்கல் மாவட்டத்திற்கு 15 ஆயிரம் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் பாக்கெட்டுகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, 5 ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான மஞ்சள் பொடிகளும் தயார் செய்யப்படுகிறது. இதுகுறித்து சங்க பணியாளர்கள் கூறியதாவது: கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தனியாருக்கு இணையாக பல்வேறு உணவிற்கு பயன்படுத்தும் மசாலா பொடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு 65 பேர் வேலை செய்து வந்தனர். தற்போது, கொரோனா தொற்றால் 15 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு மளிகை தொகுப்புகள் 500 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ள நிலையில் அதில் மஞ்சள் பொடியும் இடம் பெற்றுள்ளது. இதற்காக, மஞ்சள் பொடி பாக்கெட் போடப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இங்கு தலா 65 கிலோ கொண்ட 500 மூட்டைகள் அளவிலேயே மஞ்சள் இருப்பு உள்ளது. இந்த மஞ்சளை தரம் பார்த்து அதில் உள்ள தூசிகள், கற்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்து மஞ்சள் பொடியாக அரைத்து பேக்கிங் செய்யும் பணி நடக்கிறது. மஞ்சள் மார்க்கெட் ஏலம் செயல்பட துவங்கி உள்ள நிலையில் தேவை அறிந்து அதற்கேற்ப மஞ்சளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Introduction ,Grocery Stores ,Stores ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Government of Tamil Nadu, yellow powder, ration shop
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...