×

இங்கி.யின் 700 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக காணொளி காட்சி மூலம் பிரதமரின் கேள்வி நேரம்

லண்டன்: இங்கிலாந்தின் 700 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் கேள்வி நேரம் காணொளி காட்சி மூலம் நேற்று நடத்தப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் தற்போது வரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 823 பேர் பலியாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்கு நாடாளுமன்றத்தில் வாரந்தோறும் நடைபெறும் பிரதமரின் கேள்வி நேரம் முதல் முறையாக, கொரோனா பரவலைத் தடுக்க, காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

அப்போது குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் நாடாளுமன்றத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆன்லைனில் தங்களது கேள்விகளை கேட்டனர். இந்த கூட்டம் வெளியுறவு அமைச்சரும், பொறுப்பு பிரதமருமான டொமினிக் ராப் தலைமையில் நடந்தது. பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பு  ஏற்பட்டு இப்போதுதான் குணமாகி ஓய்வு எடுத்து வருகிறார். இதனால், அவருக்கு பதிலாக ராப் தலைமையில் கூட்டம் நடந்தது. இங்கிலாந்தின் 700 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் கேள்வி நேரம் நேற்றுதான் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது.


Tags : time , UK, video footage, PM's question time
× RELATED நமச்சிவாயம் தோல்வி எதிரொலி:...