×

விமானங்களில் பயணிகள் மாஸ்க் அணிந்தாலே போதும் காலி சீட்டு வேலைக்கு ஆகாது: திட்டத்தை புறக்கணிக்கும் விமான நிறுவனங்கள்

* விமானத்தில் ஒரு சீட்டு காலியாக விட்டு வைப்பதால், பயணிகளிடையே 78 அங்குலம்தான் இடைவெளி கிடைக்கிறது. இது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகாது.
* காலி சீட்டால் டிக்கெட் கட்டணம்தான் 3 மடங்கு உயரும். எனவே, இதற்கு பதிலாக, பயணிகளுக்கு மாஸ்க், கையுறை அணிவதை கட்டாயம் ஆக்கலாம்.

புதுடெல்லி: விமானங்களில் சமூக இடைவெளியை பேண ஒரு சீட்டு காலியாக வைத்திருக்கும் திட்டத்தை ஏற்க விமான நிறுவனங்கள் மறுத்துள்ளன. இதற்கு பதிலாக, பயணிகள் மாஸ்க் மற்றும் கையுறை அணிவதை கட்டாயம் ஆக்கினாலே போதும் என்று வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு விமான சேவையை தொடங்குவதற்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அரசு அறிவுறுத்தலின்படி, கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளி கட்டாயம் என்பதால், விமான பயணிகளுக்கான பேருந்திலும், விமானத்திலும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர அனுமதிக்கக்கூடாது என நிறுவனங்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 எனவே, பாதி இருக்கைகள் காலியாகத்தான் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர்-72 விமானத்தில் 36 இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. இதுபோல் ஏ320 விமானத்தில் 120 இருக்கைகள்தான் நிரப்பப்பட உள்ளன.  அதாவது, ஒவ்வொரு பயணிக்கும் அவருக்கு அருகில் உள்ள இருக்கை காலியாக இருக்கும். ஏற்கெனவே கொரோனாவால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. பாதி இருக்கைகள் காலியாக வைத்திருப்பதால், விமான கட்டணங்களை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என விமான நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.  இந்நிலையில், விமானங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் திட்டத்தை சில விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன. இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், ‘‘பயணிகளிடையே சமூக இடைவெளி கட்டாயம்தான். பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 மீட்டர் இடைவெளி கட்டாயம் என உலக சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கின்றன.

ஆனால், விமானத்தில் ஒரு சீட்டு காலியாக விடுவதால் 78 அங்குலம் மட்டுமே இடைவெளி கிடைக்கிறது. அதோடு, ஒவ்வொரு வரிசையிலும் ஜன்னலோர இருக்கைகள் அனைத்தையும் காலியாக விட வேண்டி வரும்.குறுகலான விமான சீட் அமைப்பில் இது சாத்தியமில்லை. இதனால் மூன்றில் ஒரு சீட்டில்தான் பயணிகள் அமர முடியும். இதனால் டிக்கெட் விலைதான் மூன்று மடங்கு உயருமே தவிர, பயணிகள் பாதுகாப்பை இது உறுதி செய்வதாக இருக்காது. மூன்று மடங்கு அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, இதற்கு பதிலாக பயணிகளுக்கு மாஸ்க் மற்றும் கையுறை அணிவதை கட்டாயம் ஆக்கலாம் என விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : passengers ,airplanes ,Airline boycotts airlines , Flights, passengers, mask, corona, airlines
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்