நிதி வசதியுள்ள 50 கோயில்கள் மூலம் 10 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: நிதி வசதியுள்ள 50 கோயில்கள் வருமானம் மூலம் 10 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க கமிஷனர் பணீந்திர ரெட்டி மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதில்,

* கோயில்களில் இலவச திருமணங்களை நடத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கும் இணைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி அந்தெந்த கோயில்களில் வருகை தரும் பொதுமக்கள்/பக்தர்கள் பார்வையில் படும் வகையில் விளம்பர பலகை, விளம்பர தட்டிகளின் மூலம் நன்கு விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

* வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியின் அடிப்படையில் இலவச திருமணத்திற்கு தகுதியான இணைகளை தேர்வு செய்து பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

* இலவச திருமணத்திற்கு தேர்வு செய்யப்படும் இணைகளுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான வசதியான முகூர்த்த தேதி விபரத்தினை முன்னரே பெறப்பட வேண்டும்.

* தேர்வு செய்யப்படும் இணைகளுக்கு திருமணக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும், திருமண மாலைகளுக்கான செலவினம், புரோகிதர் சம்பாவனை, நாதஸ்வர மேள செட் கட்டணம், ஒரு திருமணத்திற்கு 50 நபர்களுக்கு உணவு போன்றவற்றிற்கான செலவினங்கள் கோயில் நிதியில் இருந்து வழங்கப்பட வேண்டும்.

* வரப்பெறும் விண்ணப்பங்கள் அவற்றில் தேர்வு செய்யப்பட்டவை மற்றும் இலவச திருமணம் நடைபெற்ற தேதி செலவின விபரம் ஆகியவற்றை உரிய பதிவேடுகளில் பதிவு செய்து பேணி வர வேண்டும்.

* திருமண முகூர்த்த  தேதி ஒவ்வொன்றிலும் அதிக பட்ச எண்ணிக்கையில் இலவச திருமணங்களை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  உரிய முன்னேற்றம் காட்டப்பட வேண்டும்.

* இலவச திருமணம் நடத்துவதற்கான விபரத்தினை 2020 ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் அந்தெந்த மாதத்திற்கான முன்னேற்ற விபரத்தினை அடுத்த மாதம் 3ம் தேதிக்குள் அந்தெந்த மண்டல இணை ஆணையர்கள் அனுப்பி வைக்க வேண்டும். திருமணங்கள் நடத்த தேர்வு செய்யப்படும் கோயில்கள் பட்டியல் மற்றும உத்தேச செலவு திட்டத்தை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>