×

சொந்த வீட்டிலேயே சாப்பாட்டுக்கு கையேந்தும் நிலை ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுக்க ஹெல்ப் லைன்: அரசுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

சென்னை: சொந்த வீட்டிலேயே மனைவியிடம் சாப்பாட்டிற்காக கையேந்தும் நிலையை தவிர்க்கவும் ஊரடங்கு நேரத்தில் வீடுகளில் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து முறையிட தனியாக உதவி எண்ணை (ஹெல்ப் லைன்) உருவாக்க கோரி தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வக்கீல் டி.அருள் துமிலன் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:   குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல ஆண்களை சட்டத்தைக் காட்டி மிரட்டி வீட்டில் அடிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்  மனைவி எனும் பெண்கள்.  உண்மையில் பல கணவன்கள் தனது சொந்த வீட்டில், மனதளவில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.  

நிராயுதபாணியாக தான் சந்திக்கும் குடும்ப வன்முறை குறித்து, புகார் கொடுக்க அல்லது தான் அனுபவித்து வரும் இன்னல்களை, துயரங்களை தெரிவித்து பாதுகாப்பு தேட இடமின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்.  இன்னும் பலர் சொந்த வீட்டில் தெரு நாயைவிட கேவலமாக நடத்தப்பட்டு, உணவுக்காக வீட்டிலேயே கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்.  நிதர்சனம் இவ்வாறு இருக்க, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக மகளிர் ஆணையம் ஆகியவை  இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில், இந்த அறிக்கை ஒருதலைபட்சமானதாகும்.

அனைவருக்கும் சமமான நீதி எனும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவதும் ஆகும். எனவே, கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திட குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்னைகளைத் தெரிவிக்க, ஒரு ஹெல்ப் லைன் சேவையை அரசு உடனடியாக நிறுவ வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : men ,home ,Government ,Cayenne Level of Domestic Violence Against Men , Men, Helpline, Government of Tamil Nadu,corona
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!