×

நாமக்கல் அருகே வாகன சோதனையில் கன்டெய்னர் லாரியில் ராஜஸ்தான் செல்ல முயன்ற 26 பேர் சிக்கினர்

* கேரளாவில் இருந்து நடந்து வந்து லிப்ட் கேட்டு ஏறியவர்கள்
* பரிசோதனைக்கு பின் தனிமை முகாமில் வைக்கப்பட்டனர்.

பரமத்திவேலூர்: நாமக்கல் அடுத்த பரமத்தி வேலூரில் கன்டெய்னர் லாரியில் அழைத்து செல்லப்பட்ட, ராஜஸ்தான் மாநில வாலிபர்கள் 26 பேரை வாகன சோதனையில் கண்டுபிடித்த போலீசார், அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து கொரோனா பரிசோதனை செய்து தனிமை படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதுமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியேறுபவர்களை போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். அவர்கள் சரக்கு லாரிகளில் ஏறி போலீசுக்கு தெரியாமல் சென்று வருகிறார்கள்.

வடமாநில இளைஞர்களை, சிலர் டூவீலர், கார் ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளில் அழைத்து செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீசார், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் பகுதியில் செக்போஸ்ட் அமைத்து வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். நேற்று காலை கரூரில் இருந்து பெங்களூரு செல்லும் கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். முதலில் கன்டெய்னரை திறக்க டிரைவர் மறுத்தார். போலீசாரின் கண்டிப்பை அடுத்து கன்டெய்னர் திறக்கப்பட்டது.அப்போது உள்ளே வடமாநில இளைஞர்கள் கூட்டமாக உட்கார்ந்து இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி பழனிசாமி, கன்டெய்னர் லாரி டிரைவர் மற்றும் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மற்றும் சித்தேடுகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் முதல் வாரத்தில் ஏஜென்ட் ஒருவர் மூலமாக, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அழைத்துவரப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கேரளாவிலுள்ள அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டனர். வேலை இல்லாததால் உணவுக்கு சிரமப்பட்ட இளைஞர்கள், ராஜஸ்தானுக்கே செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி 26 இளைஞர்களும் நடந்தே கேரளாவில் இருந்து தேனி, திண்டுக்கல்  வழியாக நேற்று கரூர் வந்துள்ளனர்.

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்த போது, அவ்வழியாக வந்த ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட வாகனங்களை நிறுத்தி, தங்கள் மாநிலத்துக்கு அழைத்துச்செல்ல உதவி கேட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனங்களை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்பதை கண்ட இளைஞர்கள்,  டிரைவரிடம் உதவி கேட்டுள்ளனர். அவரும் இளைஞர்களை கன்டெய்னருக்குள் ஏற்றிக்கொண்டு அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்திலேயே போலீஸ் வாகன சோதனையில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து கொரோனா தடுப்பு மண்டலக்குழு சிறப்பு அதிகாரிகளான ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார் ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

வேலூரில் இருந்து மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கேயே லாரியில் வந்த இளைஞர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆலோசனையின் படி, ராஜஸ்தான் மாநில இளைஞர்களை தனி வாகனம் மூலம் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர். இளைஞர்களை அழைத்துவந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் சப்ஜீர் சிங் என்பரையும் முகாமக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தியுள்ளனர்.

உ.பி.க்கு நடந்தே ெசல்ல முயன்ற தொழிலாளி மயங்கி விழுந்தார்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவராஜ் (55) என்ற தொழிலாளி சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, கடந்த ஏப்.14ம் தேதி கொச்சியில் இருந்து நடந்தே வந்தார். நேற்று காலை திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியில் அவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். அவரை மக்கள் மீட்டு தண்ணீர் வழங்கினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


Tags : Rajasthan Container Lorry ,Namakkal Rajasthan , Namakkal, Vehicle Testing, Container Truck, Rajasthan
× RELATED கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்