×

கொரோனா பரிசோதனையில் சிக்கல்; குமரியில் சளி மாதிரி சேகரிக்கும் கிட் தட்டுப்பாடு: போதிய உபகரணங்கள் வழங்க கோரிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கும் கிட் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களுக்கு நடத்தப்படும் பரிசோதனை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சமூக பரவல் என்ற நிலையை எட்டி இருப்பதாக அச்சம் நிலவி வருகிறது. குமரி மாவட்டத்தில் 16 பேர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன் தெரு மற்றும் மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 16 பேரில் ஒருவர் குணமாகி விட்டார். அவரது குடும்பத்தினரும், மருத்துவமனையில் உள்ளதால், அவர் இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்பட வில்லை.
இந்த நிலையில் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 45 மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சியில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் தற்போது சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சளி மாதிரிகள் சேகரிப்புக்கான கருவிகள் போதுமானதாக இல்லை. நாகர்கோவில் மாநகராட்சி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இந்த நிலை உள்ளது. கொரோனா தொற்று கண்டறியும் ரத்த மாதிரி  சேகரிக்கும் கிட் தட்டுப்பாட்டால் சளி மாதிரி சேகரிப்பில் தாமதம்  ஏற்படுகிறது. இந்த ‘கிட்’ சுகாதாரத்துறையால் மாவட்டங்களுக்கு  வழங்கப்படுகிறது.  கிட் தட்டுப்பாடு பிரச்சினையால் நாகர்கோவில் மட்டுமின்றி,  மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் பகுதிகளிலும் நேற்று சளி, சளி மாதிரிகள் சேகரிப்பு தடைப்பட்டுள்ளது. தற்போது ரேபிட் கருவிகள் மொத்தம் 300 வந்துள்ளன. இந்த கருவியும் போதுமானதாக இல்லை. இந்த ரேபிட் கருவிகள் மூலம் கொரோனா வார்டில் உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை தொடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனை அதிகரிக்க வேண்டி உள்ளது. எனவே போதுமான அளவு கிட் இருப்பில் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், மாவட்டம் முழுவதும் ழுவதும் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய போதுமான கிட் இருக்கும் பட்சத்தில், ஆரம்ப கட்ட நிலையிலேயே கொரோனாவை குணப்படுத்தி விட முடியும். ஆனால், கொரோனா பரிசோதனை செய்யும் கிட் இல்லாத நிலையில் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் சளி மாதிரி சேகரிக்கும் கிட் இல்லாத நிலையில், பொதுமக்கள் அனைவரையும் மருத்துவக்கல்லூரியில் உள்ள தொற்று தடுப்பு பிரிவில் அனுமதித்து, பின்னர் ரத்த மாதிரிகளை சேகரிக்க வேண்டிய நிலை வரும். தட்டுப்பாடு இல்லாமல் உபகரணங்களை தமிழக அரசு சப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நமது நாட்டில் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனம் மட்டுமே கொரோனா பரிசோதனை கிட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தால் நாடு முழுவதும் பரிசோதனை கிட் தயார் செய்து தர முடியாத நிலையிலும் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. வெளிநாடுகளில் இருந்து பிப்ரவரி மாதமே ெகாரோனா பரிசோதனை கிட் கொள்முதல் செய்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தவறியதன் விளைவாக கொரோனா பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றனர். சுகாதாரத்துறையினர் சளி மாதிரி சேகரிக்கும் கிட்டுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரத்தம், சளி எடுக்கும் பணியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்,  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டால் 1 கோடியும், செவிலியர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம்  இருந்து ரத்தம், சளி எடுப்பது போன்ற பணிகளில் நிரந்தரம் செய்யப்படாத, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களும்,

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள்தான் நோயாளிகளுடன் நெருங்கி சென்று சளி மற்றும் ரத்தம் எடுப்பார்கள். இவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே இவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். போதிய பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Kumari , Corona Experiment, Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...