×

கலெக்டர் அலுவலகத்திலே ‘காற்றில் பறக்குது விதி’ அமைச்சர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி ‘மிஸ்சிங்’: திமுதிமுவென திரண்ட ஊராட்சி தலைவர்கள்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டிகளை பெற வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. அமைச்சர் பாஸ்கரன் சித்த மருத்துவ பொடி அடங்கிய பெட்டிகளை 10 பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு சென்றார். கொரோனா தொற்றால் அத்தியாவசிய தேவைகளை கூட பெற முடியாத நிலையில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர்.

வெளியே வரும் மக்களுக்கு போலீசார் பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கின்றனர். ஆனால் கொரோனா தடுப்பிற்கான சித்த மருத்துவ பொடிகள் வழங்கும் அமைச்சர் நிகழ்ச்சியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கூட்டம், கூட்டமாக ஆட்கள் பங்கேற்றது அரசு ஊழியர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் செய்வதறியாது நின்றனர். ஏற்கனவே காரைக்குடியில் கடந்த 18ம் தேதி அமைச்சர் பாஸ்கரன் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். கூட்டம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போது அமைச்சர் முன்னிலையிலே, சமூக இடைவெளியை ‘காற்றில் பறக்க விடுவது போல’ கூட்டம் கூடியது, அனைவரையும் அதிர வைத்தது.



Tags : gathering ,office ,Collector ,Fly' Municipal Commissioner Prakash , Municipal Commissioner, Prakash, announces ban, food supply
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...