×

கடலூர் தென்னம்பாக்கத்தில் அழகுமுத்து அய்யனார் கோயிலில் ஊரடங்கால் சித்திரை திருவிழா ரத்து: நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

புதுச்சேரி: கடலூர் தென்னம்பாக்கத்தில் அழகுமுத்து அய்யனார் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை முதல் திங்கள் திருவிழா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள், பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் ஏமாற்றமடைந்தனர். புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் அழகமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை முதல் திங்கள் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். கடலூர், விழுப்புரம் மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பவர். அவர்கள் திருமணம், குழந்தை வரம், வீடு கட்டுதல், உடல்நலம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு ேநர்த்திக்கடனாக பிரார்த்தனை பொம்மையை கோயிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் 108 நாதஸ்வர மேளக் கச்சேரியும் இடம்பெறும்.

 இந்தாண்டு கொரோனா நோய் தடுப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அழகமுத்து அய்யனார் கோயிலில் சித்திரை முதல் திங்களான இன்று வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதில் பூசாரிகள், கோயில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.
 ஊரடங்கு தடை காரணமக குட்டியாங்குப்பம், ஏம்பலம், நல்லாத்தூர், தென்னம்பாக்கம் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோயிலுக்கு வந்து செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்டிருந்தன. அங்கு தமிழக, புதுச்சேரி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சித்திரை திருவிழா ரத்து காரணமாக அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேர்த்திகடன் பொம்மைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. அதை தயாரித்து வைத்திருந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களும் தங்களின் வேண்டுதலுக்காக இவற்றை நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

 இதுபற்றி நேர்த்திக்கடனுக்கான பொம்மைகளை தயாரித்து விற்பனையில் ஈடுபடுபவர்கள் கூறுகையில், வருடந்தோறும் தென்னம்பாக்கம் அழகமுத்து அய்யனார் கோயில் சித்திரை முதல்திங்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஆயிரக்கணக்கான பொம்மைகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்தாண்டு விழா கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதால் அவை விற்பனையாகாமல் எங்களின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது என்றனர்.

Tags : festival ,temple ,Pazhayamuthu Ayyanar ,Cuddalore Thennampakkam Cultural Festival , Cuddalore, Aazhummuttu Ayyanar Temple, Chitra Festival, Cancellation
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா