×

தவளக்குப்பம் அருகே பரபரப்பு; கள்ளுப்பானைகளை உடைத்த போலீசார்: கூட்டம் கூட்டமாக குவிந்த குடிமகன்களுக்கு ஆப்பு

பாகூர்: தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் கள் குடிக்க ஏராளமான குடிமகன்கள் குவிவதால், அங்குள்ள பனைமரம் மற்றும் தென்னை மரங்களில் இருந்த கள் பானைகளை போலீசார் கைப்பற்றி உடைத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் ‘குடி’மகன்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் சரக்குக்கு பேர் போன புதுச்சேரியின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. ரூ.40, 50க்கு விற்ற குவார்ட்டர் பாட்டில்கள் எல்லாம் தற்போது 200, 300 என விற்கிறது. அதுவும் கிடைக்கவில்லையே என பல இடங்களில் குடிமகன்கள் புலம்பும் நிலைதான் உள்ளது. என்னதான் கலால் துறை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற விற்பனை தொடர்ந்த வண்ணமே உள்ளன.
புதுவையில் மது வகைகளைப் போலவே கள்ளும் பிரபலமானதுதான். இதனால் சரக்கு கிடைக்காத பலருக்கு கள்ளும் ஒரு வகையில் கைகொடுத்து வருகிறது.

போதைக்காக ஏங்கும்  குடிமகன்களை மகிழ்விப்பதற்காக புதுவையின் சில இடங்களில் பனைமரங்கள், தென்னைமரங்களில் பானைகளை கட்டி கள்ளை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சிலர் பனைமரங்கள், ஏரிக்கரைகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அங்கு குடிமகன்கள் அதிகளவில் குவிந்து கள்குடிக்கும்போது, சண்டை சச்சரவில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான தவளக்குப்பம் போலீசார் அப்பகுதிக்கு நேரில் சென்றனர். அப்போது அங்கு பனைமரம் மற்றும் தென்னைமரங்களில் கட்டப்பட்டிருந்த கள்ளுப்பானைகளை இறக்கி சாலையில் ேபாட்டு உடைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உறுவையாறை சேர்ந்த மாணிக்கம் (60), மூர்த்தி (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் வண்ணான்குளத்தில் சாராயம் விற்ற சேகர், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக விஜயமூர்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.


Tags : Crowds ,Stir , Frog, pigeon, cop
× RELATED தஞ்சாவூரில் இளநீர் விற்பனை மும்முரம்: அலைமோதும் மக்கள் கூட்டம்