×

கொரோனா விழிப்புணர்வு பேனரில் அமைச்சர் படத்தை தவிர்த்த எம்.எல்.ஏ.க்கள்: ஈரோடு அதிமுகவில் கோஷ்டி மோதல்

ஈரோடு: ஈரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு பேனரில் அமைச்சர் கருப்பணனின் படத்தை உட்கட்சி பூசலால் தவிர்த்துள்ளனர். இதனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கால் உணவு பொருட்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு அதிமுக, திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பவானி நகர செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் தனிப்பிரிவாகவும், அதேபோல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் தனிப்பிரிவாகவும் செயல்பட்டு வந்தனர். இதனால் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இடையே பிரிவினை ஏற்பட்டு வந்தது.

கடந்த 16ம் தேதி, ஈரோடு மாவட்ட போலீசாருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவைகளை வழங்க அமைச்சர் கருப்பணன் முடிவெடுத்திருந்தார். இந்நிகழ்ச்சி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சக்திகணேசன் தலைமையில் நடந்தது. இதில், பவானி நகர செயலாளர் கிருஷ்ணராஜ், ஆதரவாளர்கள் சிலருடன் வந்திருந்தனர். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநகர் மாவட்ட செயலாளருமான ராமலிங்கம் உட்பட யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகர் மாவட்டம் சார்பில் பிரம்மாண்ட கொரோனா விழிப்புணர்வு பேனர் நீதிமன்ற தடையை மீறி வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், கொரோனா ஒழிப்போம் என்ற வாசகமும், விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அந்த பேனரில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான கருப்பணனின் படத்தை தவிர்த்து விட்டனர். இது அமைச்சர் கருப்பணனின் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : clash ,Corona ,Erode AIADMK , Corona, Minister portrait, Erode Prime Minister
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்