×

‘விசாரணை’ படத்தின் கதை ஆசிரியர் செய்த சேவை ரோட்டு ஓரம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கோவை ஆட்டோ டிரைவர்: ‘‘ஊரடங்கு காலத்தில் மறக்க முடியாத நிகழ்வு’’ என்கிறார்

கோவை: கோவையில் ரோட்டோரத்தில் பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பிரசவம் பார்த்தார். இவர் எழுதிய லாக்கப் என்ற நாவல், விசாரணை என்ற பெயரில் சினிமாவாக வந்தது குறிப்பிடத்தக்கது.  கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி உள்ளனர். நேற்று முன்தினம் குடிசையில் இருந்த 26 வயது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது கணவர், அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரனுக்கு தகவல் தெரிவித்து அழைத்தார். அவரும் விரைந்து வந்து கர்ப்பிணியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் கர்ப்பிணி வலியால் துடித்தார். அதற்கு மேல் தாமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், அந்த இடத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க சந்திரன் நினைத்தார். அந்த பெண் முதலில் தயங்கினார். ஆனால் அவருக்கு சந்திரன் தைரியம் கொடுத்தார். இதையடுத்து ரோட்டோரத்தில் மறைவான இடத்தில் கர்ப்பிணி படுக்க வைக்கப்பட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் உதவியுடன் சந்திரன் பிரசவம் பார்த்தார். சில நொடிகளில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அதில் தாய் மற்றும் சேயை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ரோட்டோரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆட்டோ டிரைவர் சந்திரன், லாக்கப் என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல் ‘விசாரணை’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவம் பார்த்தது பற்றி சந்திரன் கூறுகையில், ‘‘என்னை உதவிக்கு அழைத்ததும் உடனடியாக அந்த  இடத்துக்கு சென்று விட்டேன். கர்ப்பிணி பெண்ணை தூக்கி ஆட்டோவில் ஏற்ற  முயன்றபோது அவரது பனிக்குடம் உடைந்து விட்டது. இதனால், ரோட்டோரம் படுக்க வைத்து பிரசவம் பார்த்தோம். உடன் எனது மகள் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் இருந்தனர். சிறிது ேநரத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆட்டோவில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றார். அந்த பிரசவத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சுகப்பிரசவம் பார்க்கும் நடைமுறை ஓரளவு தெரிந்திருந்ததால் தைரியமாக இறங்கினேன். ஊரடங்கு காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் நடந்த இந்த பிரசவம் என்னால் மறக்க மறக்க முடியாத  ஒரு நிகழ்வு’’ என்றார்.



Tags : Coimbatore Auto Driver ,author ,Investigation ,Curfew , Investigation, Story Editor, Woman, Childbirth, Coimbatore, Auto Driver, Curfew
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...