×

கொரோனா எங்களை ஒண்ணும் பண்ணாதுங்க... வவ்வால்களை கடவுளாக வணங்கும் கிராம மக்கள்: ஆந்திராவில் வினோதம்

இன்று உலகத்தை மிரட்டி, முடக்கியுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வவ்வால்களில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. இதனால், இப்போது வவ்வால்கள் என்றாலே மக்கள் அலறுகின்றனர்.  இத்தகைய சூழலில் கூட, ‘எங்கள் கிராமத்துக்கு வவ்வால்களால் ஏதும் நேராது. கொரோனாவும் வராது. அவைகளால் தங்கள் வியாதிகள் தீருகின்றன,’ என்று உறுதியுடன் கூறுகின்றனர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் தவனம்பல்லி மண்டலம் பைபல்லி கிராம மக்கள். இந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் உள்ள மரங்களை முழுமையாக மூடி தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கின்றன வவ்வால்கள். இவ்வாறு இக்கிராமத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் அனைத்து மரங்கள், பாழடைந்த வீட்டின் கட்டிடங்களில் நிறைந்துள்ளன.

தினமும் இரவு நேரங்களில் இவைகள் எழுப்பும் இரைச்சல், கிராம தண்ணீர் தொட்டிகளின் மீதும், வீட்டின் கூரைகள், வீட்டின் மாட்டுத் தொழுவங்கள் என சிதறி கிடக்கும் அவற்றின் எச்சங்கள், அதனால் ஏற்படும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு என எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவற்றை தினமும் அப்புறப்படுத்துவதை முகம் சுளிக்காமல் செய்கின்றனர்.  கொரோனா பீதிக்கு இடையிலும், இவற்றின் அவர்கள் பாசம் காட்டுகின்றனர். ‘இவைகளால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இவைகள் தெய்வங்கள் போன்றதுதான். மேலும், எங்கள் குழந்தைகளுக்கு எந்த வியாதியும், துஷ்ட சக்திகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்காக இறந்த வவ்வால்களின் எலும்பை இடுப்பில் வைத்து கட்டுகிறோம்,’ என்கின்றனர் இந்த மக்கள்.

அத்துடன், குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் 3 நாட்கள் ஊரின் நடுவில் உள்ள வவ்வால்கள் நிறைந்த மரத்தை சுற்றி வந்து வணங்கி கயிறு கட்டுகின்றனர். இந்த வழக்கம் கடந்த 200 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த முதியவர் ஜெயராம் கூறும்போது, ‘எங்கள் கிராமத்தில் 10, 15 தலைமுறைகளாக வவ்வால்கள் நிறைந்த மரங்கள் புனிதமானவையாகவே பார்க்கப்படுகின்றன. இவற்றால் எங்களுக்கு எந்த தொற்று வியாதியும் இதுவரை வந்ததில்லை,’’ என்றார்.

நரி மூஞ்சி, நாய் மூஞ்சி
மனிதர்களுக்கு வைரஸ்களை பரப்புவதில் வவ்வால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் நிபா வைரசை பரப்பியது பழம் திண்ணி வவ்வால்கள்தான என கருதப்பட்டது. கொரோனா வைரசுக்கும், வவ்வால்களுக்கும் தொடர்பு உள்ளதை உலக சுகாதார நிறுவனமும் கண்டுபிடித்துள்ளது. நம்நாட்டில் உள்ள  பழம் திண்ணி வவ்வால் இனத்தில், ‘பெடாரோபஸ் மற்றும் ரூசெட்டஸ் ஆகிய இரண்டு வகைகள் உள்ளன. இதில், ஒன்று நரி முகம் போலவும், மற்றொன்று நாய் முகம் போலவும் இருக்கும். நாட்டின் பல பகுதிகளில் உள்ள 78 வவ்வால்களின் மலக்குடல் பகுதியில் உள்ள திரவங்களை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 வவ்வால்களிடம் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 4 வவ்வால்களுமே கேரளாவைச் சேர்ந்தது என்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வு கட்டுரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.


Tags : God ,Coronation Of Us Bats , Corona, Bats, Villagers, Andhra
× RELATED தண்ணீர்… தண்ணீர்…