×

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுமாற்றம் 10 லட்சம் மக்களில் 177 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடக்கிறது: நிபுணர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவில் 10 லட்சம் பேரில் 177 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகமாகி வருகிறது.  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கும், சமூக இடைவெளியும் மட்டுமே போதாது; பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தால் மட்டுமே அதை சாதிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வைரஸ் அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளும் எண்ணிக்கையை வேகப்படுத்த வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ‘‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பொது மக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். மேலும், வைரஸ் அறிகுறி உள்ளவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளும் வேகத்தை அரசு அதிகரிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நோயாளிகளை விரைவாக கண்டறிந்து, வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்,’’ என்றனர்.

தற்போது, இந்தியாவில் வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களிடம் ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிபாடிஸ் ஆகிய 2 விதமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதிகளவு மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனையின் எண்ணிக்கை வேகப்படுத்தப்படவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 14ம் தேதி வரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 893 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 27,339 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே அமெரிக்கா 31 லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் 9,367 பேருக்கு அமெரிக்கா பரிசோதனை நடத்துகிறது. இதுவே, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வெறும் 177 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்படுகிறது.  உலகளவில் பலி எண்ணிக்கை முன்னணியில் உள்ள இத்தாலி, 10 லட்சம் பேரிடமும், ஸ்பெயின் 6 லட்சம் பேரிடமும் இதுவரை பரிசோதனை செய்துள்ளன.

12,759 பேருக்கு பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 12,759 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1,515 பேர் குணமடைந்துள்ளனர். 10,824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களில் 76 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
மொத்த பலி எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 187 பேர் பலியாகி உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,081 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 1,578 பேரும், தமிழகத்தில் 1,267 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,090 பேர் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசத்தில் 55 பேர் இறந்துள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு சில நாட்களில் 15வது இடத்துக்கு செல்லும்
உலகளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வருகிறது. அதிக கொரோனா நோயாளிகள் பட்டியலில் இந்தியா தற்போது 18வது இடத்தில் உள்ளது. அடுத்த சில நாட்களிலேயே 15வது இடத்திற்கு முன்னேறும் நிலை உள்ளது.

மருந்து கண்டுபிடிக்கும் 6 இந்திய நிறுவனங்கள்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்களின்படி, உலக அளவில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொரோனா மருந்தை கண்டறிய ஆய்வு நடத்தி வருகின்றன.

இதில் 3 நிறுவனங்கள், விலங்குகளிடம் சோதனை நடத்தி அடுத்த கட்டமாக மனிதர்களிடம் மருந்தை பரிசோதித்து வருகின்றன. மற்ற நிறுவனங்கள் ஆய்வக மற்றும் விலங்குகளிடம் பரிசோதிக்கும் நிலையில் உள்ளன. மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவதில் பல்வேறு கட்டங்கள் இருப்பதால் கொரோனா மருந்து நிச்சயம் 2021ம் ஆண்டுக்கு முன்பாக தயாராக வாய்ப்புகள் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.



Tags : experts , Corona, Experts, India
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...