×

கெமிக்கல் குடித்து உயிர் விடும் மது அடிமைகளுக்காக டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கெமிக்கல்களையும், கள்ளச்சாராயத்தையும் குடித்து பலியாகும் அபாயம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

சென்னை: கெமிக்கல்களை குடித்து பலியாகும் மது அடிமைகளை காப்பாற்ற 2 மணி  ேநரம் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.   சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளை திடீரென மூடியதால் மதுவுக்கு அடிமையானவர்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பலர் முக சவரம் செய்ய பயன்படும் லோசன், கைகளை சுத்தப்படும் சானிடைசர் போன்றவற்றை குளிர்பானங்களில் கலந்து குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

போதைக்காக புதுக்கோட்டையில் சேவிங் லோசனை குடித்து 3 பேரும், செங்கல்பட்டில் பெயின்ட் வார்னிசை குடித்து 3 பேரும் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு நேரத்தில் 10 பேர் கெமிக்கல் போன்றவற்றை குடித்து பலியாகியுள்ளனர். இவர்களை போன்றவர்களை சாவிலிருந்து தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்க வேண்டும். மது அடிமைகளுக்கு ஆலோசனை வழங்க தனி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்ய வேண்டும் எனக்கோரி அரசுக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ஏற்கனவே, மருத்துவர் அறிவுறுத்தலின் அடிப்படையில் மதுபானங்களை வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் அசாம் அரசும் அறிவித்தது. அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Tags : stores ,task shops ,Case ,Tasmanian , Chemical, alcohol addicts, task shop, case dismissal
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!