×

சேலத்தில் கொரோனா பரப்பியதாக கைது; 11 இந்தோனேசியர் உள்பட 16 பேர் புழல் சிறையிலடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்

சேலம்: சேலத்தில் கொரோனா நோயை பரப்பியதாக கைது செய்யப்பட்ட 11 இந்தோனே சியர்கள் உள்பட 16 பேரை சென்னை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். தமிழகத்தில் கொரோனா நோய் வேகமாக பரவி வந்த நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் ஜெய்நகர் பகுதியில் உள்ள மசூதியில், இந்தோனேசியாவை சேர்ந்த 11 பேர் வந்து மதப்போதனை மேற்கொள்வதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று, கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதித்தனர். அதில், அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 11 இந்தோனேசியர்கள், வழிகாட்டியாக சென்னையில் இருந்து வந்தவர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 18 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்ததில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த 11 பேரும் சுற்றுலா விசாவில் சேலம் வந்து மதப்போதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் சேகர் கொடுத்த புகாரின் பேரில், கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி, இந்தோனேசியாவை சேர்ந்த 11 பேர்,

அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையை சேர்ந்த ஒருவர், அவர்களை வரவேற்ற சேலத்தை சேர்ந்த 4 பேர், மசூதி முத்தவல்லி உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததாகவும் வழக்கு பதியப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 11 இந்தோனேசியர்கள், ஒரு வழிக்காட்டி உள்ளிட்ட 16 பேரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர், தனிமை வார்டில் இருந்த நிலையிலேயே வீடியோ கான்பரன்சிங் மூலம் சேலம் ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் சிவா முன் ஆஜர்படுத்தினர்.

அதில், 11 இந்தோனேசியர்கள் உள்ளிட்ட 16 பேரையும் ஆத்தூர் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஆனால், 16 பேரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால், உடனே சிறைக்கு கொண்டுச் செல்ல முடியவில்லை. இன்று காலை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 இந்தோனேசியர்கள், சென்னையை சேர்ந்த வழிகாட்டி ஆகிய 5 பேர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், கைதான 11 இந்தோனேசியர்கள் உள்பட 16 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு ஆத்தூருக்கு புறப்பட்டனர்.

ஆத்தூர் சிறை நிர்வாகம், இந்தோனேசியர்கள் உள்ளிட்ட 16 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவு வழங்கியது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் சென்னைக்கு 16 பேரையும் கொண்டுச் சென்றனர். அங்கு இன்று மதியம் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Salem ,Indonesians ,prison ,Corona , Salem, Corona, Arrested, Thrift Prison
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...