×

1,242 பேருடன் பாதிப்பில் தமிழகம் 3வது இடம் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 392 பேர் பலி: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், நாடு முழுவதும் இந்த தொற்றுக்கு 392 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவின் வுகானில் உருவான கொரோனா ெதாற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 11,933 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  செவ்வாய்கிழமை மாலை தொடங்கி தற்போது வரை 39 பேர் புதிதாக கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதில் 18 பேர் மகாராஷ்டிராவிலும், உபியில் 6 பேர், குஜராத், டெல்லியில் தலா 2 பேரும், கர்நாடகா, தமிழகத்தில் தலா ஒருவர் என மொத்தம் 39 பேர் பலியாகி உள்ளனர். இதனால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11,933ஆக அதிகரித்துள்ளது. இதில் 9,756 பேருக்கு தீவிர பாதிப்பு உள்ளது. 1,305 பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். இறந்தவர்களில் அதிகப்பட்சமாக 178 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசத்தில் 53 பேரும், டெல்லியில் 30, குஜராத்தில் 30 பேரும் அதிகளவில் இறந்துள்ளனர்.

இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும் முதலிடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது. இங்கு 2,687 பேர், டெல்லியில் 1,561 பேர், தமிழகத்தில் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களை 1005 பேருடன் ராஜஸ்தானும், 987 பேருடன் மத்திய பிரதேசமும், 735 பேருடன் உத்தர பிரதேசமும், 695 பேருடன் குஜராத்தும் பிடித்துள்ளன.  
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்குக்கு பிறகு நடந்த உயிர்ச் சேதம்
கடந்த மார்ச் 24ம் தேதி பிரதமர் முதல் ஊரடங்கு அறிவிக்கும் முன்பு வரை  இந்தியாவில் கொரோனா தொற்று 520 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. 11 பேர் பலியாகி இருந்தனர்.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் அதாவது கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,397 ஆகவும், பலி எண்ணிக்கை 35 ஆகவும் அதிகரித்தது. இந்த காலத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. ஏப்ரல் 7ம் தேதி வரையிலான 2வது வாரத்தில் பலி எண்ணிக்கை 124 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 4,789 ஆகவும் அதிகரித்தது.

21 நாள் ஊரடங்கின் இறுதிநாளான கடந்த 14ம் தேதி வரையிலான காலத்தில் பலி 339 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆகவும் அதிகரித்துள்ளது. ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியிருக்காவிட்டால் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை விறுவிறு என அதிகரித்திருக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஊரடங்கை அமல்படுத்தி இருக்காவிட்டால் நேற்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8.2 லட்சமாக அதிகரித்திருக்கும் என அது தெரிவித்துள்ளது.


Tags : country ,state ,health ministry announcement ,Corona ,The Union , Tamil Nadu, Corona, Ministry of Health
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...