×

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கும் வியட்நாம்!!

ஹனோய்: கொரோனாவால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட வியட்நாமில் பொதுமக்களுக்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தையும் எட்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கான  தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வியட்நாம் அரசு படுதீவிரமாக இருக்கிறது. இதுவரை வியட்நாமில் 265 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க லாக்டவுன், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றில் அந்நாட்டு அரசு மும்முரமாக கவனம் செலுத்துகிறது. மேலும் சிறு குறுந்தொழில் நிறுவனங்களையும் வியட்நாம் அரசு மூடியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இப்படி வருவாயை உடனடியாக இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வியட்நாமின் பல நகரங்களில் இலவச அரிசி வழங்கும் ஏ.டி.எம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும் வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் இந்த ஏடிஎம் இயந்திரங்களை அமைத்துள்ளனர். ஹனோய் நகரில் வாட்டர் டேங்கில் அரிசி நிரப்பப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் சுமார் 6 அடி இடைவெளிவிட்டுதான் நிற்க வேண்டும் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. ஹூய் நகரில் கல்லூரி ஒன்றில் ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மக்களுக்காக 2 கிலோ அரிசியை இலவசமாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஹோசிமின் நகரத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அரிசி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் வியட்நாமின் பல நகரங்களில் மேலும் பல அரிசி ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.

Tags : Vietnam ,People ATMs , Curfew, General Public, ATM, Free Rice, Vietnam
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார...