×

மும்பை தாராவியில் கேள்விக்குறியான சமூக இடைவெளி; கொரோனாவுக்கு இதுவரை 7 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்வு

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கொரோனாவுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் பல்வேறு இடங்கள் பளபளவென மின்னினாலும் தாராவி மட்டும் சேதமடைந்த கருப்பு வெள்ளை புகைப்படம் போலவே காணப்படுகிறது. 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாராவியில் 6 முதல் 10 லட்சம் பேர் வரை வசிப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்கும் அளவிற்கு மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடம் தாராவி. சென்னை மற்றும் நியூயார்க் நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 27 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.  மக்கள் நெருக்கத்தில் தாராவியை விட 10 மடங்கு குறைவாக இருக்கும் நியூயார்க் நகரமே கொரோனா பாதிப்பில் சிக்கி திணறி கொண்டு இருக்கிறது. இவ்வாறு உள்ள சூழ்நிலையில் தீப்பட்டியை அடுக்கி வைத்தார் போல் நெருக்கமாக இருக்கும் தாராவி மக்களை கொரோனா விட்டு விடுமா?. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவி பகுதியில் கொரோனா ஊடுருவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க  தாராவியின் முக்கிய இடங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாராவி மக்கள் வேதனை;
மக்கள் நெருக்கம் மிக்க தாராவியில் கொரோனாவை சமாளிப்பதில் சவாலாக உள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுவதாக தாராவி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் வேலையும் இல்லை; உதவியும் கிடைக்கவில்லை. கழிப்பிட வசதி பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஒரு கழிப்பறையை சுமார் 500 பேர் பயன்படுத்தும் நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Mumbai ,Tarawi , Mumbai Daravi, Social Gap, Corona
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...