×

வீட்டில் உள்ள பொருட்கள் மூலமே எளிமையாக வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்: ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் பேட்டி

சென்னை,: ஊடரங்கு காலத்தில் வீட்டில் உள்ள பல்வேறு சமையல்  பொருட்களை கொண்டே எளிமையாக வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் தெரிவித்தார்.  கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கிறது. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் கிடைக்காமல் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்க வீட்டில் உள்ள தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டே வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் கூறியதாவது:  ஊரடங்கு காலத்தில் உடல் எந்தவித பணியும் செய்யாமல் இருப்பதால் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை குறைந்து வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, வைட்டமின் சி அதிகம் உள்ள உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக தினசரி உணவில் காய்கறிகள் மற்றும் கீரைகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான இடங்களில் காய்கறிகள் மற்றும் கீரைகள் கிடைக்கிறது. எனவே வீட்டில் உள்ளவர்கள் எளிதாக இந்த உணவுகளை சமைத்து உட்கொள்ளலாம். குறிப்பிட்ட கீரை வகைகள் கிடைக்காவிடில் எப்போதும் கிடைக்க கூடிய முருங்கை  கீரையை தினசரி எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும். இதை தவிர்த்து நெல்லிக்காய் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருக்கும் போது அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் எப்போதும் உள்ள இஞ்சி, சுக்கு, மிளகு உள்ளிட்ட சமையல் பொருட்களை கொண்டு  வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இதை அளித்தால் சளி வராது. சீரகத்தை வறுத்து தண்ணீரில் போட்டு குடிக்காலம். இது உடலுக்கு நல்லது. பயறு மற்றும் கடலை வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அனைவரது வீட்டிலும் சுண்டல் உள்ளிட்ட பெரும்பாலான பயறு வகைகள் மற்றும் கடலை வகைகள் இருக்கும். தினசரி காலை மற்றும் மாலை இந்த பயறுகளை எடுத்துக் கொள்ளலாம்.   குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நேரம் தவறி சாப்பிட்டால் கூடுதலாக சாப்பிடுகின்றனர். இதனால் உடல்நிலை சரி இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sujata Venkatesan , Vitamin, Foods, Nutritionist, Dr. Sujata Venkatesan
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...