×

கொரோனாவை தடுக்க, பொருளாதார பேரழிவிலிருந்து காக்க பிரதமர் மோடி உரையில் எவ்வித செயல்திட்டமும் இல்லை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை,: கொரோனாவை தடுக்கவும், பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காக்கவும் பிரதமர் மோடியின் உரையில் எந்தவித செயல் திட்டமும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   நாடு முழுவதும் ஏற்கனவே 21 நாள் ஊரடங்கை தொடர்ந்து மொத்தம் 40 நாட்களுக்கான மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். கொரோனா நோய் தடுப்பிற்காக 40 நாட்களில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்கப்போவது குறித்தோ, நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தோ எந்த விதமான செயல் திட்டமும் இல்லை.

கொரோனா நோய் பரவலை தடுக்கவோ, பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்கவோ எதிர்கால செயல்திட்டங்கள் எதையும் பிரதமர் உரையில் இல்லை.   இந்தியாவில் அமைப்பு சாராத தொழிலாளர்களாக இருக்கிற 43 கோடி பேருக்கு எத்தகைய வாழ்வாதாரத்தை பிரதமர் மோடி வழங்கப்போகிறார் என்று நாடே எதிர்பார்க்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மிகப்பெரிய அளவிலான நிதியை உடனடியாக ஒதுக்கப்படவில்லை எனில் மக்களிடையே பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடி சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

 மக்கள் ஊரடங்கு காரணமாக நாட்டில் நிலவுகிற பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அமெரிக்கா ஒதுக்கியது போல இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத தொகையான 20 லட்சம் கோடியை மத்திய பாஜ அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் 1943ம் ஆண்டில் ஏற்பட்ட  வங்காள பஞ்சத்தில் மக்கள் எப்படி பசி பட்டினியால் லட்சக்கணக்கில் மடிந்தார்களோ, அப்படி ஒரு பேராபத்து இந்தியாவில் ஏற்படும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.

Tags : KS Alagiri PM Modi ,speech ,KS Alagiri , Corona, Economy, Prime Minister Modi, KS Alagiri
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...