×

தேயிலை தோட்டங்களில் பரவும் சிவப்பு சிலந்தி நோய்: விவசாயிகள் கவலை

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை தோட்டங்களில் பரவிவரும் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட தேயிலை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக  உள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் குந்தா பகுதியில் மழை அறவே பெய்யாத நிலை உள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களாக தேயிலை மகசூல் படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில், தற்போது சமவெளி பகுதிகளை போல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வறட்சியின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதுடன் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல்  ஏற்பட்டுள்ளது. இந்நோய் தாக்கியுள்ள தோட்டங்களில் இருந்து அடுத்தடுத்துள்ள தோட்டங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்களில் செடிகள் நிறம் மாறி சிவப்பாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். நல்ல மழை பெய்தால் மட்டுமே தேயிலை தோட்டங்களில் பரவி வரும் சிவப்பு சிலந்தி நோய் கட்டுப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Tags : Tea plantations , Tea, red spider disease
× RELATED ஆக்கிரமித்து வைத்திருந்த தோட்டத்தில்...