×

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் மளிகை கடையை உடைத்து பொருட்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: கடையம் அருகே பரபரப்பு

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜ். பொட்டல்புதூரில் மெயின் பஜாரில் மளிகை கடை வைத்துள்ளார். மிகவும் பிரபலமான இவரது கடையில் பொட்டல்புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான வெள்ளிக்குளம், காவூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, ரவணசமுத்திரம், மீனாட்சிபுரம், பாப்பான்குளம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை கடை செயல்பட்டு வருகிறது. மதியத்திற்கு பிறகு கடை அமைந்துள்ள பொட்டல்புதூர் சாலை மற்றும் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும். நேற்று மதியம் வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை அடைத்த ராஜ், இன்று காலை 7 மணியளவில் மீண்டும் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் ஷட்டரில் பூட்டுகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, ஆழ்வார்குறிச்சி சப்இன்ஸ்ெபக்டர் காஜாமுகைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஷட்டரில் உள்ள 3 பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையின் எதிரே வீசப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும் மற்றொரு பூட்டு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மளிகை கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீடி, சிகரெட் மற்றும் சோப்புகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.பல ஆயிரம் இருக்கும் எனத்தெரிகிறது. கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாததால் அதை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். கடையின் உள்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள கொள்ளையர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

அலைமோதிய கூட்டம்
மளிகை கடையில் கொள்ளை நடந்திருப்பது தெரியாமல் இன்று காலை பொட்டல்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் பொருட்கள் வாங்க கடை முன் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் அலைமோதியது. அவர்களை இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags : Burglars ,grocery store ,shop , Curfew, grocery store, loot, shop
× RELATED படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி...