×

ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பஸ் ஸ்டாப்பில் பசியால் இறந்து கிடந்த முதியவர்: திருப்புவனம் அருகே பரிதாபம்

திருப்புவனம்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வீட்டுக்குள் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 70 வயது முதியவர் சிக்கிக் கொண்டார். பஸ் போக்குவரத்து இல்லாததால் திருப்புவனம் அருகே உள்ள சக்குடி விலக்கு பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையிலேயே, நடக்க முடியாத நிலையில் சோர்ந்து படுத்துவிட்டார்.

ஊரடங்கு காரணமாக இந்தப் பஸ் ஸ்டாப்புக்கு யாரும் வரவில்லை. இதனால் பகல், இரவென பசியோடு வெயிலிலும், குளிரிலும் தவித்தபடி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இங்கேயே கிடந்தவர், பசியால் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை அந்த வழியாக டூவீலரில் சென்ற ஒருவர், முதியவர் இறந்து கிடப்பதைக் கண்டு, திருப்புவனம் போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றினர்.

முதல் நாள் இரவே அவர் இறந்திருந்தது தெரிந்தது. குடிக்க தண்ணீர் கூட இன்றி, வேட்டி துண்டுடன், முதியவர் நிழற்குடையிலேயே இறந்து கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.போலீசார் கூறுகையில், ‘‘சிவகங்கை, அல்லது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவராக தெரிகிறது. உணவு கிடைக்காமல் பசியால்தான் இவர் இறந்துள்ளார். இவரது படத்தை பல்வேறு காவல் நிலையங்களுக்கும் அனுப்பி, விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

Tags : bus stop , Curfew, old man, turnover, pity
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...