×

குறுக்கு வழியில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக்கூடாது

* கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு * காரசார விவாதம் – நாற்காலி, கல்வீச்சுதூத்துக்குடி: குறுக்கு வழியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிப்பதால் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக்கூடாது என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் காரசார விவாதம் எழுந்ததுடன் கல்வீச்சு-மோதல் சம்பவமும் நடைபெற்றது. நாட்டில் கொரோனா 2-வது அலை  தீவிரமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கானோர்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன்  பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்  ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும்  என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனு  மீது மத்திய அரசு நேற்று முன்தினம் அளித்த பதில் மனுவில், ‘‘நாட்டில் கொரோனா  தொற்று வேகமாக பரவி வருவதால், ஸ்டெர்லைட்  ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதி தரலாம்’’ என்று மத்திய அரசு தெரிவித்தது.   இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில்,  ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்  நேற்று காலை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எஸ்.பி. ஜெயக்குமார்,  சப்-கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் கலோன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கலெக்டர் செந்தில்ராஜ், ‘‘ஸ்டெர்லைட்  ஆலையை திறக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதில்  நிலையாக உள்ளது. நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையை அரசு திறக்க அனுமதிக்காது.  காலை 11 மணிக்குள் கருத்துக்களை கேட்டு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட்  தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில்தான் இந்தகூட்டம் காலையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அரசு ஆலையை திறக்க அனுமதிக்காது’’  என்றார். மேலும் கலெக்டர், ‘‘ஆக்சிஜன் பிளான்ட்டை திறக்க யாரோனும் ஆதரவு தெரிவிக்கிறீர்களா?’’ என்று  கேட்டார். அப்போது தொழிலதிபர்கள் 2 பேர் ஆதரவு தெரிவிப்பதாக கைகளை  உயர்த்தினர். இதனால், ஆத்திரமடைந்த சிலர், 2 பேரையும் நோக்கி பாய்ந்தனர். மேலும், கலெக்டர் கண் முன்பே ஒரு நபர், நாற்காலியை  ஆதரவாளர்களை நோக்கி வீச முயன்றார். உடனே, போலீசார், தொழிலதிபர்கள் 2 பேரையும் மீட்டு அவர்கள் அருகே நின்று பாதுகாப்பு அளித்தனர். அப்போது  எதிர்ப்பாளர்கள், ‘‘மாற்று வழியில் ஆலையை திறக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு, நீங்கள் ஆதரவாக பேசுகிறீர்களா?, இங்கே கூறிய எங்கள் கருத்துக்கு என்ன அறிக்கை அனுப்பப்  போகிறீர்கள்?’’ என்று கலெக்டரிடம் கேட்டனர்.  அதற்கு அவர், ‘‘95 சதவீதம் எதிர்ப்பு உள்ளது  என்றே அறிக்கை அனுப்புவேன்’’  என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.இறுதியில் சுமார் 50 நிமிடங்கள் எதிர்ப்புக்கு  மத்தியிலேயே கருத்துக் கேட்புக்கூட்டம் நடந்து முடிந்தது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை  எதிர்ப்பாளர்கள் 14 பேர், வர்த்தக நிறுவனங்களை சேர்ந்த 6 பேர் மற்றும்  அரசுத்துறை அதிகாரிகள் என  50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கூட்டம் நடந்தபோது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது, அருகில் உள்ள கிராமங்களைச்  சேர்ந்த சில பெண்கள் கூட்டமாக வந்தனர். கூட்டத்தில் இருந்த பெண்களை நோக்கி  ஒரு வாலிபர் கற்களை வீசி தாக்கினார். இதில் இரு பெண்கள் காயமடைந்தனர். உடனே, போலீசார் அந்த நபரை பிடித்து வெளியேற்றினர். இதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர். கூட்டத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்த ஆக்சிஜனால் வாழ ேவண்டிய அவசியம் இல்லைகூட்டத்தில் பேசிய கலெக்டர், ‘‘ஆக்சிஜன் பிளான்ட்டை ஸ்டெர்லைட்  நிர்வாகத்திற்கு பதிலாக தமிழக அரசே ஏற்று நடத்தினால் ஒத்துக்கொள்வீர்களா?’’  என்று கேட்டார். அதற்கு பதிலளித்த எதிர்ப்பாளர்கள் பல உயிர்களை பலி  வாங்கிய அந்த ஆலை தற்போது மக்கள் உயிரை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருகிறேன் என்று மாற்று வழியில் திறக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்யும் ஆக்சிஜனால்  நாங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட கொரோனாவாலேயே செத்து  மடியலாம்’’ என்றனர்….

The post குறுக்கு வழியில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக்கூடாது appeared first on Dinakaran.

Tags : Karasara ,Chair ,Kalithuthoothukudi ,Dinakaran ,
× RELATED ஒருசில மாநிலங்களில் 7 கட்டங்களாக...