×

கொரோனாவை எதிர்த்து போராட முடக்கமும், சமூக விலகலும்தான் இப்போதைக்கு தடுப்பு மருந்துகள்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கருத்து

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு: நம் நாட்டில் கடந்த 8ம் தேதி வரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேரை பரிசோதிக்கும் அளவுக்கு தற்போதைய திறன் நம்மிடம் உள்ளது. 136 அரசு பரிசோதனைக் கூடங்களிலும், 59 தனியார் பரிசோதனைக் கூடங்களிலும்  பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் லேசான அறிகுறிகளுடன் உள்ளனர். 15 சதவீதம் பேருக்கு கடும் பாதிப்பு உள்ளது. இவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 5 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு அபாய நிலையில் உள்ளனர்.

தற்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 17 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 48 ஆயிரத்து 538 வென்டிலேட்டர்கள் அடுத்த சில வாரங்களில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. முழு கவச உடைக்கு உலகம் முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது. இப்போது வரை 1.57 கோடி கவச உடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இந்தியா உட்பட உலக நாடுகள் போராடி வருகின்றன. இப்போதைக்கு கொரோனாவை தடுப்பதற்கு இருக்கும் தடுப்பு மருந்துகள், முடக்கமும், சமூக விலகலும்தான். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் சில நாட்கள் இந்தியாவுக்கு சிக்கலானதாக இருக்கும்.

முடக்க நிலை, சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றினாலும், 2 முதல் 4 வாரங்களுக்கு பிறகே நோய் பரவலின் தாக்கம் குறைவதை, உலக நாடுகளின் அனுபவங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. 2003ம் ஆண்டில் சார்ஸ் ஒழிக்கப்பட்டதுபோல், கொரோனாவையும் ஒழிப்பதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு, இந்தியாவில் கொரோனா பாதிப்பை குறைத்து, உயிர் பலிகளை குறைக்கும் முயற்சிகளில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா கொள்ளை நோய் பாதிப்பு, குறுகிய காலத்தில் உயர்ந்து, பிறகு குறையும் வாய்ப்பு உள்ளது. மக்களிடம், ‘சமூக எதிர்ப்பு சக்தி’ அதிகரிக்கும்போது, அடுத்த சில மாதங்களில் இந்த பாதிப்பு குறையும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Harsh Vardhan ,Corona , Corona, Social Secession, Minister Harsh Vardhan
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...