×

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற வாலிபர் குணமடைந்து வீடு திரும்பினார்: கோயில் பிரசாதம் வழங்கி கலெக்டர் வழியனுப்பினார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 10 பேர்  திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேட்டவலம் அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு  வணிக வளாகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வீடு திரும்பிய அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 5வது நாளில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 2வது முறையாக ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று குறைந்திருப்பது தெரியவந்தது. எனினும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை நேற்று மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த வாலிபருக்கு அண்ணாமலையார் கோயில் பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்ட ஆரம்ப நிலையிலேயே அவர் மருத்துவமனைக்கு வந்தது சிகிச்சைக்கு உதவியாக இருந்தது. சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார். எனவே, விரைவில் நலம் பெற்றார். மற்ற நபர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்றனர்.



Tags : Thiruvannamalai Government Hospital ,Coronally ,home ,Corona , Thiruvannamalai, Government Hospital, Corona
× RELATED எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்