×

அமெரிக்காவுக்கு போனது ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மாத்திரை கடும் தட்டுப்பாடு

* கடலூரில் 15 நாளாக மனைவி தவிப்பு; கணவன் கதறல்
* மாவட்ட நிர்வாகம் முயன்றும் கிடைக்காத சோகம்

மதுரை: கொரோனாவிற்கென ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரைகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரத்த புற்றுநோயில் பாதித்த பெண், இந்த மாத்திரை கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக தவியாய் தவித்து வருகிறார். இதேபோல ஏராளமான நோயாளிகள் மாத்திரை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
 கடலூர் மாவட்டம், நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மதுரையில் கார் டிரைவராக உள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் சொந்த ஊர் செல்ல முடியவில்லை. கடலூரில் வசிக்கும் இவரது மனைவி சுகுணா (39) ரத்த புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருகிறார்.  புதுச்சேரி மருத்துவமனையில் அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று திரும்பும் மனைவிக்கு, கடலூர் தனியார் மருந்துக்கடை ஒன்றிலிருந்து மாதம் 1,500க்கு ஐந்து வகை மாத்திரைகளை இவர் வாங்கி கொடுத்து வருகிறார்.

இதில் ஒன்று ‘ஹைட்ராக்சி குளோரோகுயின் சல்பேட் 200 எம்ஜி’ மாத்திரை.   தொடர்ந்து வாங்கிவரும் மருந்துக்கடையில் இந்த மாத்திரை தீர்ந்து விட்டதாகவும், இனி கிடைக்காது என்றும் கூறிவிட்டனர்.  கடலூரைச் சுற்றியுள்ள பல மருந்துக்கடைகளில் தேடி அலைந்தும், இந்த மாத்திரை கிடைக்கவில்லை. இதனால் சக்திவேலின் மனைவியின் உடல்நிலை நாளுக்கு நாள் பாதித்து வருகிறது.  செய்வதறியாத சக்திவேல், மதுரையைச் சேர்ந்த வக்கீல் சந்தனம் உதவியுடன், கடலூர் மாவட்ட கலெக்டர், எஸ்பி, மருத்துவ ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர், சுகாதாரச் செயலாளர் வரையிலும் இமெயில் அனுப்பி, ‘என் மனைவியின் உயிர்காக்கும் மாத்திரை கிடைக்க உதவுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். கடலூர் கலெக்டரின் உத்தரவில், முஷ்ணம்  தாசில்தார் அனுப்பி வைத்த, நெடுஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் நேரடியாக   சுகுணாவின் வீட்டிற்கே சென்று மருந்துச் சீட்டை வாங்கி, பல இடங்களில் முயற்சித்தும் ‘மாத்திரை கிடைக்கவில்லை’ எனக்  கூறி மருந்துச் சீட்டை திரும்ப கொடுத்துச் சென்றிருக்கிறார்.

இதுகுறித்து சக்திவேல் கூறும்போது, ‘‘மாவட்ட நிர்வாகத்தாலேயே மாத்திரை வாங்க முடியாததை அறிந்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது, மதுரை மாவட்டத்தின் பல மெடிக்கல்களிலும் இந்த மாத்திரை இல்லை. ஐந்து ஆண்டுகளாக இந்த மாத்திரைதான் என் மனைவியை காப்பாற்றி வருகிறது. இப்போது இந்த குறிப்பிட்ட ஒரு மாத்திரை இல்லாமல், பத்து நாட்களாக கால்வலி பாதிப்புடன், உடலில் கட்டிகளும் ஏற்பட்டு வருகிறது.  இந்த மாத்திரை கிடைக்க அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். இந்த ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ கொரோனாவை குணப்படுத்துகிறது எனக்கூறி, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த  மாத்திரைகள் போதிய அளவிற்கு கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஆனால் உயிர் காக்கும் வகையிலான இந்த மாத்திரை கிடைக்காமல்  உள்ளூர் நோயாளிகள் ஏராளமானோர் தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வக்கீல் சந்தனம் கூறும்போது, ‘‘ஏழை டிரைவரின் மனைவிக்கு தாராளமாக கிடைத்து வந்த ஒரு மாத்திரை இப்போது இல்லை என்கின்றனர். அரசும், சுகாதாரத்துறை  செயலர் உள்ளிட்டோரும் இந்த பற்றாக்குறையை உடனடியாக தீர்ப்பது அவசியம்.   கேன்சர் நோயாளியான சுகுணா  போன்ற பலரும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த  மாத்திரைகள் அனைத்து மாவட்டங்களின் அரசு,  தனியார் மருந்தகங்களில் கிடைப்பதற்கான உறுதியை அரசு உடனடியாக வழங்குவது அவசியம்’’ என்றார்.

Tags : United States ,cancer sufferers , United States, hydroxy chloroquine, cancer
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!