×

மூன்று அனல்மின்நிலையங்கள் மூடல் புதிய திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: மூன்று அனல்மின்நிலையங்களை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இதற்கு தேவையான மின்சாரம் அனல், காற்று, நீர், சூரியசக்தி போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழக மின்சாரவாரியத்திற்கு சொந்தமாக 4 மெகாவாட்டிற்கு மேல் 5 அனல் மின்நிலையங்கள்  உள்ளன. இந்நிலையில் மத்திய மின்சார ஆணையம் நாடு முழுவதும் 2020ம் ஆண்டில் மூட வேண்டிய அனல் மின்நிலையங்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் 25 ஆண்டுகளை தாண்டி செயல்படும், தூத்துக்குடி-1,050 மெகாவாட், மேட்டூர்-840 மெகாவாட், வட சென்னை-630 மெகாவாட் திறனுடைய 3 அனல் மின்நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த உத்தரவின்படி 3 அனல்மின்நிலையங்களையும் மூடிவிட்டால், மீதம் இருக்கும் மின்நிலையத்தைக்கொண்டு தமிழக மின்தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். இதற்கு ஆண்டுதோறும் மின்நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணம். எனவே எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேணடும்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் சிறப்பு-1,320 மெகாவாட், எண்ணூர் விரிவாக்கம்-660 மெகாவாட், வடசென்னை மூன்று-800 மெகாவாட் திறனில் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உடன்குடி-1,320 மெகாவாட், உப்பூர் 1,600 மெகாவாட் திறனில் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Tags : closure ,wind farms ,Closing ,Union , Anal stations, closures, trade unions
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...