×

வாழைத்தார்கள் வரத்து குறைந்தது: கத்தரிக்காய் விலையில் ஏற்ற, இறக்கம்

நெல்லை:  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர். இதனால் பல்வேறு பொருட்களின் விலை கடும் சரிவுக்கு உள்ளாகி வருகிறது. மார்க்கெட்டுகளில் காய்கறி மற்றும் பலசரக்கு விற்பனை மட்டுமே சூடுபிடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வாழைத்தார்களை பொறுத்தவரை விளைச்சல் அதிகம் இருந்தும், கொள்முதல் குறைந்துள்ளதால், வியாபாரிகள் அவற்றை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். நெல்லை டவுன் காய்கறி சந்தையில் காணப்படும் வாழைக்காய் மொத்த விற்பனை மண்டியில் தினமும் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலை கட்டுகள் குவிவது வழக்கம். தற்போது வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லாததால் வரத்து குறைந்து காணப்படுகிறது. டவுனில் 100 எண்ணம் கொண்ட ஒரு குலையை ரூ.400க்கு எடுத்து கடைகளுக்கு ரூ.500க்கு விற்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக பெட்டிக்கடைகளிலும், பழக்கடைகளிலும் இரவு வியாபாரம் கிடையாது. வாழைப்பழங்களை பொறுத்தவரை இரவு நேரத்திலேயே அதிகம் விற்பனையாகும்.

இதனால் கடைக்காரர்கள் வாழைத்தார்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். டவுன் மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் வரத்து தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. களக்காடு, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி பகுதிகளில் இருந்து வரத்து 10ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. நெல்லை டவுன் மார்க்கெட்டில் காய்கறிகள் இயல்புக்கு தகுந்தபடி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கத்திரிக்காய் அன்றைய தினம் மார்க்கெட்டிற்கு வந்தது என்றால் ஒரு கிலோ ரூ.20 முதல் 30 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய தின கத்தரிக்காய் எனில் கிலோ ரூ.10 முதல் 15க்கும் விற்கப்பட்டு வருகிறது. காய்கறி விலைகள் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கு தகுந்தாற்போல் இவற்றை வாங்கி செல்கின்றனர்.



Tags : pruning , Low cost , bananas, pruning, Fluctuation
× RELATED விரைந்து சீரமைக்க விவசாயிகள்...