×

திருச்சி, புதுகை, கரூர், அரியலூரில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: 1.50 லட்சம் வாழை மரங்கள் முறிந்தன: பலத்த சூறைக்காற்றுடன் மழை: 1.50 லட்சம் வாழை மரங்கள் முறிந்தன

திருச்சி: தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 2ம் நாளாக நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று சாரல் மழை பெய்தது. தஞ்சையில் குளிர்ந்த காற்று வீசியது. புதுக்கோட்டை மாவட்டதில் நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி, அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால்  நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. கரூரில் இரவு 9 மணிக்கு மழை பெய்தது. குளித்தலையில் 2வது நாளாக நேற்றிரவு 9 மணியிலிருந்து 10 மணி வரை பலத்த மழை பெய்தது. நேற்றுமுன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் குளித்தலை  அருகே உள்ள கணேசபுரம், பொய்யாமணி, பங்களா புதூர், இனுங்கூர், திருசாப்பூர், மேல் நங்கவரம், கீழ் நங்கவரம், நெய்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.  நேற்று பலத்த காற்றால் கரூர் மாவட்டத்தில்  சாலையோரங்களிலிருந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அரவக்குறிச்சி தோகைமலை, லாலாபேட்டை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்றிரவு 7 மணி முதல் 9 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

மாவட்டம் முழுவதும் பலத்த காற்றால் மின்சாரம் தடைபட்டது. ஒரு சில இடங்களில் இரவு 10 மணிக்கு மின்சாரம் வந்தாலும்,பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய மின்சாரம் இல்லை. அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 7 மணி அளவில் மிதமான மழை பெய்தது. திருச்சியில் நேற்றிரவு 8 மணி அளவில் பலத்த காற்று வீசியது. ஜங்ஷன், டோல்கேட், ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.  பொன்மலை, கல்கண்டார்கோட்டை உள்பட பல இடங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில்  மரங்கள் முறிந்து விழுந்தது. இரவு 8 மணி முதல் விடிய விடிய  பல இடங்களில் மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் அதிகாலை 3 மணி அளவில் மின்சாரம் வந்தது. நேற்றுமுன்தினம் சூறாவளியுடன் பெய்த மழையில் புறநகர் பகுதியான ஜீயபுரம், அந்தநல்லூர், பெட்டவாய்த்தலை, பெருகமணி, காவல்காரபாளையம், திண்டுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தாறுடன் இருந்த 450 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன.  இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். முசிறி, தொட்டியம்  மற்றும் ஆமூர் பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் இருந்த வயல்களில் சுமார் 50 ஆயிரம் வாழைகள் சாய்ந்துள்ளன.


Tags : Trichy ,Karur ,Ariyalur , Trichy, Pudukkai, Karur, Ariyalur, Rain, Banana Trees
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...