×

மூடப்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் வீட்டுக்குள் முடங்கிய படகோட்டிகள்: வாழ்வாதாரம் பறிபோனதால் வேதனை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து படகோட்டிகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சுரபுன்னை காடுகளைக் கொண்ட சுற்றுலா தளம். இந்த காட்டுப் பகுதியில் படகில் சவாரி செய்வது ஆனந்தமாக இருக்கும். சுற்றுலா பயணிகள்  சுரபுன்னை காடுகளுக்கு நடுவே படகுகளில் சென்று காட்டின் அழகை ரசிப்பர்.  இந்நிலையில் கடந்த 23ம் தேதி கொரோனா ஊரடங்கால் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. இதனால் பயணிகளின்றி அமைதியாக பிச்சாவரம் தற்போது வெறிச்சோடி காட்சியளிக்கிறது.பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டுநர்களுக்கு நிரந்தர வருவாய் இல்லை. அவர்களுக்கு மாத ஊதியமோ, தினக்கூலி அடிப்படையிலோ சம்பளமோ கிடையாது. அதனால்  சுற்றுலா வரும் பயணிகளிடம் படகு கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையில் கமிஷனாக சொற்ப தொகை மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 தினங்களுக்கும் மேலாக பிச்சாவரம் சுற்றுலா மையம் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. படகு இல்லம் செயல்படாததால் படகு ஓட்டும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பிச்சாவரம் களை கட்டும். இந்த காலத்தில்தான் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். பரபரப்பாக காணப்படும் இந்த நேரத்தில் சுற்றுலா படகு இல்லம் மூடப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
பிச்சாவரம் படகு ஓட்டும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், பிச்சாவரத்தில் 50க்கும்  மேற்பட்ட படகு ஓட்டும் தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில், படகு இல்லம் மூடப்பட்டதால் கமிஷன் அடிப்படையில் சம்பளம் பெற்று வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட  பல்வேறு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதைப்போல படகு ஓட்டுநர்களுக்கும் 5000 ரூபாயை நிவாரண உதவியாக வழங்க வேண்டும், என்றார்.



Tags : Parakhavaram Tourist Center , Parakhavaram ,Tourist, Center
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...