×

ஐசிஎம்ஆர் அனுமதியுடன் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுக்கும் கேரளா

திருவனந்தபுரம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்து, அதற்கான அனுமதியையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் முதல் மாநிலமாக பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் பல வழிகளில் சிகிச்சை முறைகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா மாதிரிகளை எடுத்து, அதிலிருந்து கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.கொரோனாவிலிருந்து குணமான ஒருவரின் உடலில், கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும். அவற்றை அடையாளம் கண்டுப்பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுத்து சிகிச்சையளிப்பதே கேரளாவின் திட்டம். இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்கா, சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில், இந்தியாவில்  இந்த முறையைச் சோதனை செய்யக் கேரளா முடிவெடுத்துள்ளது.

கேரள அரசின் இந்தத் திட்டத்திற்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உதவியதாக மருத்துவர்கள் கூறி வந்தனர். இந்த சிகிச்சை முறைக்கான சோதனை வெற்றிகரமாக அமைந்தால், சிகிச்சைக்கான செலவு குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கேரளாவுக்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அனுமதிபெற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


Tags : Kerala ,ICMR , ICMR, Permission, Corona, Patients, Quality, Plasma, Treatment, Methodology, Kerala
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்