×

கொரோனா ஆரம்ப அறிகுறி உள்ளவர்களுக்கு ரயில்பெட்டிகள் பயன்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை:  ரயில்கள் மற்றும் பணிமனைகள் ஏற்கனவே போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜூம் ஆப் என்ற வலைத்தளம் மூலம் நீதிபதி வழக்கை விசாரித்தார். தெற்கு ரயில்வே சார்பில் வக்கீல் பி.டி.ராம்குமார் ஆஜராகி, ரயில் பெட்டிகள் மருத்துவமனையாக மாற்றப்படுவதில்லை. கொரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளது. அதிக பாதிப்பு ஏற்படும்போது  மற்ற மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை இருந்தால் மட்டுமே ரயில் பெட்டிகள் வார்டுகளாக பயன்படுத்தப்படும்.

 மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதியின் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே அதில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.  அவர்களுக்கு  மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்திலும் இந்த தகவல் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.  இதை பதிவு செய்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இந்த வழக்கில்  உரிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.


Tags : Corona ,Railbirds: High Court , Corona, Railroads, High Court, Southern Railway
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...