×

கொரோனா வைரஸ் பரவலால் விமானங்கள் ரத்து விமான முன்பதிவு டிக்கெட் கட்டணம் ரீபண்ட் கிடையாது

* ஓராண்டுக்குள் பயணிக்க வாய்ப்பு
* விமான நிறுவனங்கள் அதிரடி

சென்னை: கொரோனா வைரஸ் பீதி, ஊரடங்கு காரணமாக விமானங்கள்  ரத்தானதால் பயணம் செய்ய முடியாத  பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் ரீபண்ட்  கிடையாது என்றும், ஓராண்டுக்குள் அதே பயணி அதே விமானத்தில்  பயணம் செய்து கொள்ளலாம் என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்  நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்ததும்,  உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச விமானங்கள் கடந்த 22ம் தேதி நள்ளிரவிலிருந்தே ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில்,  சென்னையிலிருந்து ஏற்கனவே உள்நாட்டு விமானங்களில் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு பயணம் செய்ய பலர் விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கியதால் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை. எனவே, அந்த பயணிகள் தங்கள் விமான டிக்ெகட்களை ரத்து செய்து பணத்தை திரும்ப பெறுவதற்காக இணையதளம் மூலமாக அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டனர். அப்போது, விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், ‘‘விமான சேவைகள் இல்லாததால் உங்களுக்கு முழு பணம் திரும்ப கிடைக்கும். ஆனால், பணமாகவோ அல்லது உங்களுடைய வங்கிக் கணக்கிலோ பணம் திரும்பி வராது. உங்களுடைய  ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான கட்டணம் எங்களிடமே இருக்கும். நீங்கள், ஒரு ஆண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த பணத்தை பயன்படுத்தி புதிய டிக்கெட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஏற்கனவே முன்பதிவு செய்த அதே பயணிகள் மட்டுமே அதை பயன்படுத்த முடியும். வேறு பயணிகளுக்கு டிக்கெட்களை மாற்ற முடியாது’’என்று கூறியுள்ளது பயணிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதிலும், ஒவ்வொரு விமான நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாக கூறியுள்ளன. ஒரு தனியார் விமான  நிறுவனம், ‘2021 பிப்ரவரி 28ம் தேதிக்குள் என்றும், கோ ஏர் நிறுவனம் 2021 ஏப்ரல் 30ம் தேதிக்குள் என்றும், இண்டிகோ நிறுவனம் தற்போது டிக்கெட் எடுத்திருந்த தேதியிலிருந்து ஒரு ஆண்டிற்குள் என்றும் கூறியுள்ளன.

தனியார் விமான நிறுவனங்கள்தான் இதுபோல் செய்கின்றன என்றால், அரசு பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏர் இந்தியா நிறுவனமும் ரீபண்ட் கிடையாது. ஓராண்டிற்குள் அதே பயணி  பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் கொடுத்துள்ள காலக்கெடுவிற்குள் பயணம் செய்யாத பயணிகள், தங்கள்  பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு விமான சேவையில் இந்த நிலை என்றால், சர்வதேச விமான பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. சர்வதேச விமான பயணிகள் டிக்கெட் பற்றி இதுவரை எந்த முடிவும்  எடுக்கவில்லை  என்று விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இப்படி?
டிக்கெட் ரீபண்ட் விவகாரம் குறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காலியான விமானங்களை இயக்கி கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் விமானங்கள் இயக்கப்படாத நாட்களுக்கு  ஆயிரக்கணக்காண பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரீபண்ட் கொடுப்பது என்பது முடியாத செயல். எனவே தான் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளோம். மேலும், இது சென்னை விமான நிலையத்தில் மட்டுமல்ல. இந்தியா  முழுவதும் அனைத்து விமான நிறுவனங்களும் இந்த திட்டத்தை தான் செயல்படுத்துகின்றன என தெரிவிக்கப்பட்டது.

Tags : Airline cancellation ,flights ,virus transmission Airline cancellation , rona virus, flights canceled, airline booking tickets
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...